நலன்புரி நபர்களை அடையாளங்காண புதிய செயலி (APP)




 


(வி.சுகிர்தகுமார்) 0777113659   


  அரசினால் வழங்கப்படும் நலன்புரி நன்மைகள், கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை தெரிவுசெய்வதற்கான முன் மாதிரி கள ஆய்வு தேசிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் அக்கரைப்பற்று 7 கீழ் 1 பிரிவில் முன் மாதிரி கள ஆய்வு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரனின் அறிவுறுத்தலுக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட முன் மாதிரி கள ஆய்வு வேலைத்திட்டத்தை  பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நெறிப்படுத்தினார்.

அரசினால் வழங்கப்படும் நன்மைகள், கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள தகுதியான நபர்கள் மற்றும் குடும்பங்களை தெரிவு செய்வதற்குரிய ஒழுங்கமைப்பட்ட முறையான கணிணி மூலமாக சேகரிப்பட்ட தகவல்கள் இதுவரையில் இல்லாத நிலையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக அரசினால் கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தக்கூடிய புதிய செயலி (APP) ஒன்றும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் களப்பயிற்சியும் செயலியின் பரீட்ச்சார்த்த பரிசீலனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.

  இச் செயலியை பயன்படுத்தி ஒவ்வொரு பயனாளிகள் வீடுகளுக்கும் அனுமதியளிக்கட்ட உத்தியோகத்தர்கள் சென்று தகவல்களை சேகரித்து பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இக்கள ஆய்வு ஆரம்ப நிகழ்வில் தலைமையக சமுர்த்தி முகாமையாளர் கிருபாகரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சமூக சேவைகள் உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலகத்தின் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.