நெல் உற்பத்தியை உத்தரவாத விலையில் அரசு கொள்வனவு செய்யும் நடவடிக்கை





வி.சுகிர்தகுமார் 0777113659


 அம்பாரை மாவட்ட விவசாயிகளின் பெரும்போக நெல் உற்பத்தியை உத்தரவாத விலையில் அரசு கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் கலந்து கொண்டு நெற்கொள்வனவை ஆரம்பித்து வைத்தார்.
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள நெற்கொள்வனவு மற்றும் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று கிழக்கு கமநல சேவை பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கமக்காரர் நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் அரிசி ஆலை உரிமையாளர்கள் கமக்காரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நெல் ஈரப்பதன் 14 வீதம் தொடக்கம் 22 வீதம் வரையான நெல் இங்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதன் பிரகாரம் ஈரப்பதன் 14 இற்கு குறைவானதாகவும் பதரின் அளவு 9 வீதத்திற்கு குறைவானதாகவும் இனக்கலப்பு 6 வீதத்திற்கு குறைவானதாகவும் கழிவு 1 இற்கு குறைவானதாகவும் கிருமிநாசினி மற்றும் சேறு அற்றதாகவும் இருக்கும் உரிய தரத்தில் உள்ள வெள்ளை சிவப்பு நாடு நெல் கிலோ ஒன்றிற்கு 100 ரூபாவும் அவ்வாறு உரிய  தரத்தில் இல்லாத  வெள்ளை சிவப்பு நாடு நெல் கிலோ ஒன்றிற்கு 88 ரூபாவும் அரசால் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லிற்கு அரச வங்கிகளினூடாக 24 மணித்தியாலங்களுக்குள் பணம் வழங்கப்படும் என்றும் இங்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு பதிவு செய்தல் உறுதிப்படுத்தப்பட்ட விவசாயி ஒருவரிடம் இருந்து ஆகக்கூடுதலாக 5000 கிலோ நெல் கொள்வனவு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டது.
இதேநேரம் பெரும்போக அறுவடை ஆரம்பமான நிலையில் அம்பாரை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல் குறைந்த விலைக்கு தனியார் நெற் கொள்வனவாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டு வந்தமை தொடர்பில் அம்பாரை மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கமக்காரர் நலன்புரி சங்கம்  உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் அன்மையில் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.