Showing posts with label Central. Show all posts


(க.கிஷாந்தன்)

தலவாக்கலை - ஹொலிறூட் ஈஸ்ட் பிரிவு தோட்டத்தில் உள்ள லயக்குடியிருப்பில்  2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவல்  காரணமாக 24 வீடுகளைக் கொண்ட  குறித்த லயக் குடியிருப்பு முற்றாக எரிந்து தீக்கிரையானது.

இதனால் 24 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தோட்டத்தில் உள்ள பொது கலாசார மண்டபத்தில் எவ்வித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில்,தொடர்ந்தும்  மூன்று வருடங்களாக அக்கலாசார மண்டபத்தில் பல்வேறு அசௌகரிங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லானது,  2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டப்பட்டு பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீடமைப்பு பணிகள்  துரிதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தற்போது அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் பொது கலாசார மண்டபத்தில், சேலைகள், பெட்சீட்டுகளால் மறைத்து, பலர் வாழத் தொடங்கியுள்ளனர்.

எனவே,  உடனடியாக தமது வீடுகளை முழுமைப்படுத்தி  தருமாறு, பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


காணாமல் போன பேராதனை பல்கலைக்கழக மாணவன், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மாணவனின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகாவலி ஆற்றிலிருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 


(க.கிஷாந்தன்)

 

மஸ்கெலியா பிளாண்டேசனானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாற்று நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை எமக்கு ஏற்படும் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற எம்.பியுமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் நேற்று (18.09.2022) மஸ்கெலியா அம்பாள்ஸ் மண்டபத்தில் குறித்த தோட்ட தொழிலாளர்களை பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர், தவிசாளர் உறுப்பினர்கள், ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

 

இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 

 

“ மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனியே மிக மோசமான நிறுவனமாக உள்ளது. நஷ்டம், நஷ்டம் எனக் கொக்கரிக்கும் சில கம்பனிகள், நஷ்டம் என்றால் எதற்கு தொடர்ந்தும் இயங்க வேண்டும்? தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம் அல்லவா? நிர்வாகங்கள் இலாபம் உழைக்கின்றன. ஏமாற்று வித்தையாகவே நஷ்டம் என்ற கதைக் கூறப்படுகின்றது.

ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் எட்டு மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம். சரி நாம் வேலை செய்கின்றோம், 8 மணி நேரத்தில் 2 கிலோ தான் கொழுந்து பறித்தால் என்ன செய்ய முடியும்? ஆக தொழிலாளர்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும்.

வன்முறைகள் வேண்டாம். முறையாக போராடுவோம். தொழிற்சங்கங்கள், கொழும்பில் ஒன்று கூடி பேச்சு நடத்தினோம். இது விடயத்தில் இணைந்து செயற்பட தீர்மானிக்கப்பட்டது. காங்கிரஸ் என்றும் தொழிலாளர் பக்கம் நிற்கும். “ - என்றார்.

 


 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

 

இந்தச் சம்பவத்தில் கனரக வாகன சாரதி படுகாயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

பொலன்னறுவையிலிருந்து வெலிமடை, பதுளை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லொறி சென்று கொண்டிருந்த இந்த கனரக வாகனம் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டையிழந்த கனரக வாகனம் வீடொன்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானதால் வீட்டுக்கும் பலத்த சேதமேற்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டினுள் யாரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


!க.கிஷாந்தன்)

 

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

 

கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

 

மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக 06.09.2022 அன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

 

அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

 

அத்தோடு கெனியன் நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதோடு, அங்கு இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.



(க.கிஷாந்தன்)

நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அந்தந்த தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க போவதாகவும் தெரிவித்தார்.

மஸ்கெலியா சாமிமலை மாக்கலை தோட்டத்தில் இரவு பகல் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் 27.08.2022 அன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 

ஜீவன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவரும், கொட்டகலை பிரதேச சபையின் தலைவருமான ராஜமணி பிரசாந்த், மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர் திருமதி.செண்பகவள்ளி,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறும் என தெரியவந்துள்ளது. அந்த தேர்தலில் பிரதேச மக்களை உள்ளடக்கிய தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகளை போட்டியிட செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் பாரியளவில் வாக்குகளை அளித்து எங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்து அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட அரசாங்கத்தில் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய முடியாத அந்த அரசாங்கத்தில் இருந்து நாங்கள் விலகி விட்டோம். எதிர்காலத்தில் நாடு நல்ல ஒரு முன்னேற்றம் அடையும். அதன்போது மக்கள் எதிர்பாரக்கும் அபிவிருத்திகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

 (


க.கிஷாந்தன்)

 

பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாரு கோரி தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்று (19.08.2022) போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

சிங்காரவத்தை தோட்டத்தின் கிராம அபிவிருத்தி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயம் இடம்பெற்றது.

 

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சிங்காரவத்தை தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த 1800க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

பொகவந்தலாவ நகரத்திலிருந்து இத்தோட்டத்திற்கு செல்லும் ஒன்பது கிலோமீட்டர் கொண்ட பிரதான வீதி குன்றும், குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.

 

இப்பாதையை நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என அன்றாடம் தொழிலுக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர்.

 

இதேவேளை ரொக்கில், சிங்காரத்தை, வானக்காடு, மோரார் மேற்கு பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் பாதையாகும்.

 

வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் பாடசாலை மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

சுமார் 25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யாத காரணத்தினால் மண் பாதையாகவே காணப்படுகிறது.

 

புனரமைப்பு செய்து தருவதாக அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டிய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் இத்தோட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி பிரதான வீதியில் எதிர்ப்பினை முன்னெடுத்தனர்.

 

இதன்போது உடனடியாக பாதையை செப்பனிட்டு தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் இத்தோட்டத்துக்கு வருவதாகவும், தற்போது எங்களுடைய பிரச்சனையை எவரும் கண்டு கொள்வதில்லை எனவும் மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறை காட்டி இப்பாதையினை உடனடியாக செய்து தர முன்வர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 


(க.கிஷாந்தன்)

 

அம்பேவெல வாவியில் கடந்த இரு வாரங்களுக்குள் 20 இற்கும் மேற்பட்ட மரைகள் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் பின்புலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் தனது செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

ஹோட்டன் தென்ன தேசிய சரணாலய பகுதியில் மான், மரை உள்ளிட்ட வன விலங்குகள் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடப்படுகின்றன. இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட வேட்டை நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

 

தனி நபர்கள் மற்றும் சில குழுவினர் இணைந்து வன விலங்குகளை வேட்டையாடி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், அப்பகுதிகளுக்கு வருபவர்கள் மான், மரை உள்ளிட்டவற்றை உண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. 

 

கூட்டமாக வரும் மான்களை, வேட்டை நாய்கள் துரத்திச்சென்று கொல்கின்றது, நாய்களுக்கு அஞ்சி ஓடும்போது சில மான்கள் வாவிக்குள் விழுகின்றன. அதன்பின்னர் அவற்றை வேட்டைக்காரர்கள் கைப்பற்றுகின்றனர். இப்படியான முறையிலேயே வேட்டை இடம்பெற்று வந்துள்ளது.

 

எனினும், கடந்த சில நாட்களாக வேட்டையர்கள் எவரும் வருவதில்லை எனவும், நாய்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளன எனவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எனினும், நாய்களின் வேட்டை விடவில்லை. அவை மரைகளை துரத்திச் செல்கின்றன. இதனால் வாவிக்கு


 (க.கிஷாந்தன்)

நுவரெலியாவில் 03.08.2022 அன்று காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் 15.08.2022 அன்று காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞனை காணவில்லை என இளைஞனின் பெற்றோர் பொலிஸில் கடந்த 6ம் திகதி முறைபாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டில், கடந்த 3ம் திகதி வீட்டிற்கு விறகு தேடி வருவதாக கூறிவிட்டு சென்ற இளைஞன், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும், அத்தோடு, விறகு தேடி சென்ற பகுதியில் ஆற்றை கடக்க முற்பட்டபோது, கால் தவறி ஆற்றில் விழுந்து, நீரில் அடித்து செல்லப்பட்ட காட்சி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ காட்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த  பொலிஸார், தேடுதல் பணியிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையில் விசேட குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.


 (க.கிஷாந்தன்)

 

மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பிரதான போக்குவரத்து வீதி கடந்த 14 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

 

இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பிரதான வீதி மோகினி எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுக்காரணமாக இந்த பாதை முழுமையாக மண்ணால் நிரம்பியுள்ளது.

 

இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் இந்த மண்மேட்டின் ஊடாக நடந்து பயணிப்பதும் மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.

 

இதனால் இந்த பகுதியில் வாழும் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15000ற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.

 

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்தும் இந்த பகுதிகளில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடதக்கது.


 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா பகுதியிலிருந்து  லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில்  லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

நுவரெலியா பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 14.08.2022 அன்று மாலை பிரதான வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பஸ்ஸில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் மாத்திரம் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

 

பஸ் சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என  வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 (க.கிஷாந்தன்)

 

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு பெய்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது.

 

இதனால் மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளது.

 

அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் நீர் வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

 

பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தற்போது தத்தமது வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

 

எனினும், ஏனைய வீடுகளுக்கும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதாகவும், இதனால் தாம் அச்சநிலையோடு இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு பெற்று தர வேண்டும் என பாதிக்கப்பட்ட இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதேவேளை, அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பத்தனை சந்தி பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.

 

தொடர்ச்சியாக மலையகத்தில் பல பகுதிகளுக்கு கடும் காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதனாலும், தொடர் மலை பகுதிகளில் காணப்படும் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனாலும் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


(க.கிஷாந்தன்)

தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் புலியை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று (4) இரவு 11 மணியளவில் இலங்கைக்கு உரித்தான புலி ஒன்று வீடொன்றுக்குள் புகுந்துள்ளது.

நாய் ஒன்றை துரத்தி வந்த குறித்த புலி வீட்டின் கூரை மீது ஏறியபோது, கூரை உடைந்ததால், வீட்டுக்குள் விழுந்துள்ளது. இதன்போது வீட்டிலுள்ளவர்கள் பயந்து என்னவென்று பார்த்தபோது சுமார் 6 அடி நீளமான புலி வீட்டுக்குள் விழுந்ததை பார்த்துள்ளனர்.

இதன்போது வீட்டுக்குள் இருந்த புலியை பார்வையிட சென்ற குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் புலியின் தாக்குலுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், வீட்டிலிருந்த ஏனையோர் வீட்டை பூட்டிவிட்டு, வெளியே வந்து, லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் ரந்தனிகல மற்றும் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்ததுடன், அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, குறித்த புலியை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசியை செலுத்தி மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.

சுமார் 6 அடி நீளமான 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க இலங்கைக்கு உரித்தான ஆண் புலியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

 

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.