Showing posts with label Eastren. Show all posts

 


அம்பாறை - இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கீழே உள்ள கல் ஓயா தாழ்நிலத்தை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேனநாயக்க சமுத்திரத்தின் நீரின் கொள்ளளவு இன்று (10) பிற்பகல் வரை உச்ச மட்டத்தை எட்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொல்வத்தை, பஹலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


அம்பாறை மாவட்டம் மற்றும் அதனை அண்மித்த கரையோர பிரதேசங்களுக்கு விடப்படும் எச்சரிக்கை


அம்பாரை மாவட்டத்திலுள்ள சேனாநயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதன் அடிப்படையில் நீர்ப்பாசன திணைக்களமானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி குளத்தின் நீர்மட்டத்தினை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது குளத்தின் நீர்மட்டம் :- 105.10 அடி /110


நீர்மட்டம் குறைக்கப்படும் அளவு : 05 வான்கதவுகளின் ஊடாக 2.5 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.


திறக்கப்படவுள்ள நேரம் :- 2024.01.08 மு.ப.10:30 மணி


ஆபத்தான பிரதேசங்கள் :-


அம்பாரை பிரதேச செயலகப் பிரிவின் பொல்வத்த, பகலலந்த மற்றும் இறக்காமம், அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவுர், சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்கள் ஆபத்தானவை.


எனவே பிரதான கால்வாய்கள் ஆறுகள் மற்றும் தாழ்நில பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.


தகவல் - நீர்ப்பாசன திணைக்களம், அம்பாரை.

 


நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் 06 தொடக்கம் 09 மாத (வயதுடைய) குழந்தைகளுக்காக மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்குவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான வேலைத்திட்டம் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஷீர் அவர்களின் தலைமையில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று (06) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மாளிகைக்காடு சுகாதார நிலையம் மற்றும் மாவடிப்பள்ளி சுகாதார நிலையம் ஆகிய மூன்று நிலையத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸடீன் கலந்துகொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தார். மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய தாதிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


 🚨Weather Alert 🚨

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் பாயும் கதவுகள் இன்று(2) காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 (உயரம் 103.9 அடி) 


கரையோர மற்றும் தாழ் நில பகுதிகள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் 


MACM ரியாஸ்

துணை இயக்குனர்

DMC அம்பாறை


அக்கரைப்பற்று, திருக்கோவில், காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பள்ளம், சாய்ந்தமருது, கல்முனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை  போன்ற கரையோர பிரதேச மக்கள் அவதானத்துடன் இருப்பது சிறந்தது.


 மட்டக்களப்பில் மினி சூறாவளி - வீடுகளின் கூரைத் கழன்று பறந்துள்ளது  -


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனையில் இன்று (27) புதன்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. 


மினி சூறாவளியினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளின் கூரைத் தகடுகள், சீற்கள் மற்றும் ஓடுகள் சில கழன்று பறந்துள்ளன. 


அதே நேரம் அருகிலிருந்த சிறிய மரங்கள், மதில்களும் உடைந்துள்ளன. இதனால் அப் பிரதேசத்திலுள்ள சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.


தமிழ் தேசிய கூட்டமைப்பின பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் .நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவதானித்தார்.


நூருல் ஹுதா உமர்

இயற்கை வளங்கள் நிறைந்து, நாலா புறமும் கடலால் சூழப்பட்ட இந்த நாட்டில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மலிந்து காணப்படுகிறது. இவ்வாறான அழகிய நாட்டில் வாழ்ந்துகொண்டு குருதிச்சோகை (Anaemia) நோயால் பாதிக்கப்படுவது ஆச்சரியமாக உள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸதீன் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற குருதிச்சோகை (Anaemia) நோயை குறைக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி கருத்தரங்கில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கல்முனை பிராந்தியத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற நோய்களில் பெரும்பாலானோருக்கு (Anaemia) குருதிச்சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனை குறைக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

கல்முனை பிராந்தியத்தில் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏற்படுகின்ற இந்த நோயானது தற்போது 26 வீதமாகக் காணப்படுகின்றது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி எதிர்வரும் ஆண்டில் இதனை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். கடல் வளத்தினையும் மண் வளத்திணையும் கொண்டுள்ள எமது நாட்டில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மலிந்து காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த நோயினால் பாதிக்கப்படுவது கவலையான விடயமாகும்.  கற்பினித்தாய்மார்களுடைய போசாக்கு உணவு அவர்களது ஆரோக்கிய வாழ்வு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றார்.

பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பயிற்சி கருத்தரங்கில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதார மருத்துவத்துவ தாதியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மகப்பேற்று வைத்திய நிபுணர் பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் அவர்களும் டாக்டர் விவேக் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தார்கள்

 


நூருல் ஹுதா உமர் 


2023 சிறுவர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுக்குழு அலுவலகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி, நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பேச்சுகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழ் எஸ்.எம். திஹ்யா என்ற சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய தரம் 3 மாணவனுக்கு வழங்கப்பட்டது.

சக்தியைப் பாதுகாக்க, கழிவுகளைக் குறைக்க மற்றும் சூழலுக்கு இசைவான இல்லச் செயற்பாடுகளுக்கு பிள்ளைகளின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்பட்ட 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 
பசுமை நிகழ்நிலை (மொபைல்) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு டிசம்பர் 16 கொழும்பில் உள்ள ஹட்ச் ஒர்க்ஸ்  நிலையத்தில் நடைபெற்றபோது யூரோப்பியன்  யூனியன் டெலீகஷன் டு ஸ்ரீலங்கா  அண்ட் மொலட்டிவ்ஸ் ஹெட் ஒப்  கோபரேஷன் கலாநிதி ஜான் எச் ஹேசெ  அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

"ஒவ்வொரு செயலும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான பூமியை நோக்கி எனும் உலகத்தை தொடர்ந்து வளர்ப்போம்" என்பதன் ஊடாக உலகை பசுமையான இடமாக மாற்றுவதற்கான பிள்ளைகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் பொருட்டு பரிசளிப்பு மற்றும் பசுமைசார் செயற்பாடுகள் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இவர் சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் இளம் செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்ட செயலகமும், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய சுனாமி ஒத்திகை பயிற்சி நிகழ்வு இன்று (14) சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஜலால் வித்தியாலயத்தில் நடைபெற்றது. 

இதன் போது சுனாமி ஒன்று ஏற்படும் என்ற உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தால் மாணவர்களும், பாடசாலை ஆளணியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டது. அவற்றில் சுனாமி தொடர்பான அறிவுத்தல் கிடைக்கும் போது அவசர ஒன்றுகூடல் இடத்தில் ஒன்றுகூடவும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாணவர்களை கொண்டு சேர்ப்பதும் என்றவாறான செயற்பாடு இடம்பெற்றது. இதில் மாணவர்கள் பாடசாலையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரியபள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவாபிக்கா மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றியாஸ் அவர்களினது மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உத்தியோகத்தர் ஏ.எல்.எம். அல்தாப் மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவத்திற்கான உத்தியோகத்தர்கள் ஆகியோர் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினார்கள். 

UNDP இன் நிதி அனுசரணையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுதீன், பிரதி அதிபர் டீ.கே.எம். சிராஜ் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்துவத்திற்க்கு பொறுப்பான ஆசிரியர்களான யூ.கே. முபாறக் மற்றும் ஏ.எம்.எம். ஸாஹிர் ஆகியோர் பாடசாலை சார்பான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரும் கலந்து கொண்டனர்.


 நூருல் ஹுதா உமர் 


அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள மூத்த ஆலிம்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் அல்-முப்தி ஏ.எல்.எம். முர்ஷித் (ஸஃதி, நஜ்மி) தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தில் நேற்று (08) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெலிகம பாரி அரபுக் கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி)கலந்து கொண்டார். இதன் போது நீண்ட காலமாக ஆலிம்களாக கடமையாற்றிய மூத்த ஆலிம்களான,
அஷ்ஷெய்க்.எம்.எல்.முஹம்மத் சுல்தான் (கபூரி), அஷ்-ஷெய்க் இஸட் முஹம்மத் நதீர் (ஷர்க்கி), அஷ்-ஷெய்க் எம்.ஐ.முஹம்மத் ரபீக், அஷ்-ஷெய்க் எஸ்.எம்.முஹம்மத் ஆரிப் (நத்வி), அஷ்-ஷெய்க் எம்.எம். உதுமாலெப்பை (நூரி), அஷ்-ஷெய்க் யூ.எல். சாகுல் ஹமீத் (ஹாமி), அஷ்-ஷெய்க் ஏ.எம்.முபாறக் அப்துல் மஜீட் (கபூரி,மதனி), அஷ்-ஷெய்க் யூ.எல்.எம். இக்பால் (ஹாமி), அஷ்ஷெய்க் எஸ்.எச். குதுபுத்தீன் (ஹாமி), அஷ்-ஷெய்க் கே.எம்.ஹாறூன் (சலபி), அஷ்-ஷெய்க்.பி.எம்.நிஸாம் 
(ஹாஷிமி), அஷ்-ஷெய்க் எம்.சி. அப்துஸ் ஸமட் (தப்லீகி), அஷ்-ஷெய்க்.ரி.ரிபானுத்தீன் (பலாஹி), அஷ்-ஷெய்க்.ஐ.எல்.வலியுல்லாஹ் (ஹாமி), அஷ்-ஷெய்க்.ஐ.எல்.நசீர் அஹமட் (நிழாமி) ஆகியோர் நினைவு சின்னம் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.

 


( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் "ட்ரோன்" தொழில்நுட்பம் மூலம் பீடை நாசினி வீசுகின்ற புதிய நடைமுறை அம்பாறையில் அறிமுகமாகிறது.

 அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் இது தொடர்பான விளக்க செயல் முறைப் பயிற்சியை நேற்று(30) அம்பாறையில் நடத்தியது .

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச விவசாய போதனாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

 விவசாய திணைக்கள   பொறியியலாளர் இதற்கான விளக்கத்தையும் செயல்முறை பயிற்சியையும் அங்கு வழங்கினார்.

 ஒரு ஏக்கர் வயல் நிலத்திற்கு பீடை நாசினி வீசுவதற்கு நான்கு நிமிடங்களை போதுமானது என்பதனை இதன் மூலம் அறிய முடிந்தது.

இவ்வாறான  விளக்க செயன்முறை பயிற்சிகளை விவசாயிகள் மத்தியிலும் பிரதேச ரீதியாக முன் கொண்டு செல்லப்பட இருக்கிறது.

இப் புதிய தொழில்நுட்ப முறை வேளாண்மை வயலுக்கு மாத்திரமல்லாமல் கரும்பு சோளம் போன்ற பயிர்செய்கைகளுக்கும் பயன் படுத்தமுடியும். 


(B.M.பயாஸ்)

ஜனாதிபதி விருதுபெற்ற பஹிமா சுக்ரிக்கு சிறந்த தொழில் முயற்சியாளருக்கான மற்றுமொரு விருது.
அல்ட்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தவிசாளர் உணைஸ் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கை சாதனை மன்றம் நடாத்திய விருது வழங்கல் விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
பல்துறைகளில் உள்ள சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
கைத்தொழில் அதிகாரசபையின் வியாபார மேம்படுத்தல் உத்தியோகத்தர் நா.கோகுலதாஸ் இன் வழிகாட்டலில் சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
காத்தான்குடியை சேர்ந்த பஹிமா சுக்ரி (SF மொடலிங் & கார்மண்ட் ) மற்றும் அக்பர் முஹம்மட் உனைஸ் (அல்ட்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனம்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவம், புத்தாக்கம், பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதிஉச்ச கடமை என பல்துறைகளில் உள்ள ஆளுமைகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர், கலாநிதி. மது கிருஷ்ணன் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் AUGP / UNUGP USA இன் தலைமை அதிகாரியும் தலைவர் நிறுவனர்,
கலாநிதி பினா காந்தி தியோரி
(துணை இயக்குநர் சார்க் ஆராய்ச்சி
கலாச்சார மையம் - ஸ்ரீலங்கா),
பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், இலங்கை அழகி வியானா பீட்டர்ஸ் மற்றும் இலங்கை சாதனையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


#Reports/Maathaven

 அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையின் ஊழியர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில்,உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான, சிநேகபூர்வ சைக்கிள் சவாரி இடம்பெற்றது.

குறித்த இந்தச் சவாரி, ஆதார வைத்தியசாலையில் ஆரம்பித்து ஒலுவில் வரைச் சென்று மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நோக்கி விரைந்தது.

குறித்த இந்தச் சைக்கிள் சவாரியில், வைத்திய அத்தியட்சகர் உட்பட, ஏனைய வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.



 


நூருல் ஹுதா உமர் 



திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதி கஸ்ட குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு  பாடசாலை அதிபர் தாமோதரம்பிள்ளை சதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்றது.

இப் பாடசாலையானது 1985 உள்நாட்டு கலவர காலப்பகுதி அதனைத்தொடர்ந்து யுத்த காலப்பகுதியிலும் பாதிப்புக்கு உள்ளான பாடசாலையாகும். தற்போழுதும் இவ் மண்டபத்தின் மேல் தோற்றமானது சிதைவடைந்து மழை காலங்களில் மழைநீர் வடிகின்றது. இக் காலங்களில் மாணவர்களின் எந்த ஒரு நிகழ்வுகளும், பாடசாலையில் எனைய நிகழ்வுகளை நடாத்துவதற்கும் முடியாதுள்ளது. மேலும் எமது பாடசாலையில் கல்வி செயற்ப்பாட்டினை எடுத்துக்கொண்டால் சாதாரண தரத்திற்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடத்திற்கான ஆசிரியர்கள் இது வரையும் இல்லாமல் காணப்படுகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் பிரத்தியோக ஆரியர்களைக் கொண்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

சென்ற 2022 இல் சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலையில் இருந்து 11 மாணவர்கள் தொற்றி இருந்தனர் 11 மாணவர்களும் விஞ்ஞான பாடத்தில் 100'/' சித்தியினையும் கணித பாடத்தில் 9 மாணவர்கள் A தர சித்தினையும் பெற்று முதூர் கல்வி வலயத்தில் முதற்தர பாடசாலையாக இப் பாடசாலை காணப்படுகின்றது. எனவும் அதிபர் இங்கு உரையாற்றும்  போது தெரிவித்தார். 

இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜருபன், சி.காந்தன், ஆகியயோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை என்பனவற்றை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மூதூர் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். முசம்மில், ஆசிரிய ஆலோசகர் என்.எம். கலிலூர்ரகுமான், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காரைதீவு- அம்பாறை பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள தெருவிளக்குகள் பிந்திய இரவுகளில் மின்துடிப்பை மேற்கொள்வதால்  இருள் சூழ்ந்து பொதுமக்களும், பாதசாரிகளும் வீதியில் அச்சமின்றி பயணிக்க முடியாது பலத்த அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வழங்கப்பட்டிருந்த போது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி நிரந்தர ஆக்கபூர்வமான எவ்வித செயற்பாடுகளையும் காரைதீவு பிரதேச சபை மேற்கொள்ளாத நிலையில் தொடர்ந்தும் யானைகளின் நடமாட்டம், முதலைகளின் கரையொதுங்குதல், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் என மாவடிப்பள்ளி பிரதேசம் இரவில் பயணிக்க முடியாதவாறு ஆபத்தான பிரதேசமாக காட்சியளிக்கிறது.

அது மாத்திரமின்றி இருள் சூழ்ந்துள்ளமையால் குறித்த பிரதேசத்தில் பல சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட  காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதான வீதியின் ஒரு பகுதி தெரு மின் விளக்குகள் அதாவது மாவடிப்பள்ளி பெரிய பாலம் தொடக்கம் மாவடிப்பள்ளி வரை எரியாமல் உள்ளது. ஆனால் காரைதீவு பிரதேசத்தில் மின் விளக்குகள் எரிகிறது. இது எவ்வகையான திட்டம் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாவடிப்பள்ளி பிரதேச மின் விளக்குகளை மீள எரியச் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளும் காரைதீவு பிரதேச சபையால் இதுவரை மேற் கொள்ளாமல் இருப்பதை இட்டு மாவடிப்பள்ளி மக்கள் ஆதங்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதனை கருத்திற் கொண்டு காரைதீவு பிரதேச சபை உட்பட உரிய அரச நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவடிப்பள்ளி மக்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, மாவடிப்பள்ளி மொழிச் அபிவிருத்தி மற்றும் சகவாழ்வுச் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


#MaathavenReports.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழு, கழிவு முகாமைத்துவம் தொடர்பாக,அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கள  விஜயம் மேற்கொண்டிருந்தனர்.குறித்த விஜயத்தில், Dr.SLM .ஹபீஸ் (MOH) Dr. சிவசுப்ரமணியம் (AMOH) ஆகியோருடன், தாதிய உத்தியோகத்தர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr.Rajaab,Dr.அகிலன் ஆகியோருடன் கருத்தாடலிலும் ஈடுபட்டனர்.


 நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம்.றாபி (SLTS– Special Class) நாளை   திங்கட்கிழமை முதல் (13-11-2023) தனது 30 வருடகால காணி உத்தியோகத்தர் சேவையில் இருந்து தலைமைத்துவ காணி உத்தியோகத்தராக அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார்.

இவர் 1993.08.02 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று அதன் பின்னர் காத்தான்குடி , நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, திருகோணமலை, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றி பின்னர் 2023.11.13 ஆந் திகதி முதல் தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று அம்பாரை மாவட்ட செயலகத்தில் கடமையேற்கவுள்ளார்.

உத்தியோகத்தரின் பதவி உயர்வு கடிதம் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா தலைமையில் (10) அன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் புடைசூல நடைபெற்றது

 


(நூருல் ஹுதா உமர்)


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) கடந்த ஐந்து நாட்களாக நாடாளாவிய ரீதியில், மாகாண மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் அமைதி ஆர்ப்பாட்டங்களின் ஐந்தாம் நாள் நிகழ்வாக இன்று 2023.11.08 மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில், மருத்துவர்களுக்கான பொருளாதார நீதியை வழங்குவதற்கான திட்டவட்டமான செயல்திட்டத்தை அதிகாரிகளால் அறிவிக்க இயலாமைக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இலங்கையின் சுகாதாரத்துறையில் தற்போது நிலவி வரும் பாரிய பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குமாறு இதன்போது அரசினை வலியுறுத்தப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்தியத்தின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கிளைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிராந்திய ரீதியான ஆர்ப்பாட்டம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று நடைபெற்றது. இதில் கல்முனை பிராந்தியத்தின் வைத்தியர்கள் பலர் பங்கு பற்றினார்கள். தங்களது நியாயமான கோரிக்கைகளான:

1. வைத்தியர்கள், நாட்டில் தற்போது காணப்படும் எதிர்மறையான, பொருளாதார நெருக்கடியான சூழலினால் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடு செல்வதால் நாட்டில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு நியாயமான தீர்வு. அவர்களை நாட்டில் தக்க வைப்பதற்கான தகுந்த தீர்வை வழங்கல்.

2. வைத்தியர்களின் தட்டுப்பாட்டினால் கிராமிய வைத்தியசாலைகள் பல மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்குவது.

3. விஷேட வைத்திய நிபுணர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறுவதனால், பல விசேட வைத்திய சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் அபாயம்.

4. வைத்தியர்களுக்கு பொருளாதார ரீதியான எந்த ஒரு மேம்பாடும் அரசினால் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது.

5. நியாயமற்ற வரிக் கொள்கையினால் வைத்தியர்களுக்கு மேலும் மேலும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை வழங்குவது.

6. வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு.

7. தரமற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதி.

8. வைத்தியர்களின் தொழில்முறை அபிவிருத்தியை மேலோங்க செய்யும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தாமை.

போன்ற பலபிரச்சினைகளுக்கு அரசு இதுவரை உரிய மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்காமல் இழுத்தடிப்பது. இதனால் நாட்டில் இலவச சுகாதாரத் துறை பாரிய ஒரு அபாயத்தை எதிர்நோக்குவது, போன்ற பல விடயங்களை இதன் போது வலியுறுத்தப்பட்டது.


 (வி.ரி. சகாதேவராஜா)


திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஜயவிமன செயற்றிட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன .

 திருக்கோவில் பிரதேச சமுர்த்தி  தலைமைப்பீட முகாமையாளர்  எம்.அரசரெட்ணம்  தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இவ் வீடுகள் தம்பிலுவில் ~01 மேற்கு மற்றும் விநாயகபுரம் ~1 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஜயவிமன செயற்றிட்டத்தின் கீழ் பூரணபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன்,
சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆர்..புண்ணியசீலன்                        
தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதிஸ் மற்றும்  பயனாளர்களின் பிரிவுகளுக்குரிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 


நூருல் ஹுதா உமர்


உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் தெரிவு செய்யப்பட்டு நிதி பெறப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்கான இரண்டு மாடிக்கட்டிடம் நேற்று 2023.11.04 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது 

அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விசேடமாக முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தற்போதைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான டாக்டர் ஜீ. சுகுணன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்

இந்நிகழ்வில் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் சீ எம் மாஹிர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டதுடன் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

பாரபட்சமின்றி முக்கிய சேவைகளை வழங்கி வரும் பணிமனையின் குழாத்தினரை அன்னமலை பிரதேச வைத்தி சாலையின் அபிவிருத்தி குழுவினரும் ஆலயத்தின் பிரதிநிதிகளும் ஊர் மக்களும் திரண்டு பிரம்மாண்டமான இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி கௌரவித்தவுடன் நிகழ்வின் இறுதியாக மரங்களும் நட்டு வைக்கப்பட்டன

 


நூருல் ஹுதா உமர் 


டயக்கோனியா அமைப்பின் ஆசியப் பிராந்தியத்தின் ஐந்து நாடுகளுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மூன்று நாடுகளுக்கும் பொறுப்பான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டயக்கோனியா அமைப்பின் பிராந்திய தொடர்பாடல் அதிகாரி திருமதி வனீவ்னா தங்சத்தியன் ரப்ஹப் (ரீனா)  கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் அழைப்பின் பேரில் 2023.11.02.ம் திகதி பாடசாலைக்கு வருகை தந்தனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ( MWRAF) , மற்றும் டயகோனியா அமைப்பின் ஆதரவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட சிறுவர் சமாதான பூங்கா, மற்றும் பாடசாலையின் ஒரு பகுதியாக இயங்கி வரும் "கிரீன்வீச்" ஆங்கில பாலர் பாடசாலை போன்றவற்றையும் பார்வையிட்டதோடு, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் பற்றியும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் டயக்கோனியா நிறுவனத்தின் இலங்கைக்கான செயற்திட்ட முகாமையாளர் திருமதி நிஷாந்தினி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.