மூச்சுக்காற்றை வைத்தே புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்!




ஒருவர் வெளியேற்றும் சுவாசக்காற்றை வைத்தே அவருக்கு புற்று மற்றும் நீரிழிவு நோய் தாக்கியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் அரிய முயற்சியில் ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். 

புற்று, நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகம் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குள்ளானவர்களின் மூச்சுக்காற்றில் ஒருவித துர்நாற்றம் கலந்திருக்கும். அந்த நாற்றத்தை தரம்பிரிக்கக்கூடிய சக்தி கொண்ட இந்த புதிய மென்பொருள், ஒருவரின் மூச்சுக்காற்றை வைத்தே அவருக்கு புற்று உள்ளிட்ட நோய்கள் உள்ளதா? என்பதை தெளிவாக கண்டுபிடித்துவிடும். 

ஜப்பான் அரசின் கூட்டமைப்புடன் அந்நாட்டின் பிரபல ஆய்வு நிறுவனம் மற்றும் ஒசாகா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை மாணவர்கள் சமீபத்தில் உருவாக்கியுள்ள இந்த மென்பொருள் புற்று மற்றும் நீரிழிவு நோயை கண்டுபிடிக்கும் ஆற்றல் நிறைந்ததாக சோதனை ரீதியாக நிரூபணமாகியுள்ளது.

மேற்கண்ட நோய்கள் உள்ளனவா? என்பதை மிக குறைந்த செலவில் இந்த புதிய கருவியின் மூலம் தெரிந்துகொண்டு அடுத்தகட்டமாக சிறப்பு சிகிச்சைகளை எடுத்துகொள்ள இந்த புதிய கருவி உபயோகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதற்கு தேவையான நோய்சார்ந்த சுவாசக்காற்றின் துர்நாற்ற வகைகளை தரம்பிரித்து பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. கைபேசி போன்றவற்றில் இந்த புதிய மென்பொருளை இணைத்து விட்டால் விலை குறைவான இந்த புதிய கருவி இன்னும் ஆறாண்டுகளுக்குள் வர்த்தக ரீதியாக விற்பனைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.