"பணி நேரத்தில் ஊழியர்களின் இணைய உரையாடல்களை நிறுவனம் கண்காணிக்கலாம்"




ஊழியர்களின் பணியிட இணைய தகவல் தொடர்பாடலை நிறுவனம் கண்காணிப்பது தவறல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பு.

அலுவலக நேரங்களில், தனது தொழிலாளர்கள் அனுப்பும் இணையவழியான கலந்துரையாடல்களையும் செய்திகளையும் அவர்களின் முதலாளிகள் வாசிப்பதற்கும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கும் தடையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வேலை நேரத்தில் தொழிலாளி ஒருவர் யாகூ மெஸஞ்சர் ஊடாக அனுப்பிய தகவலை, அந்த நிறுவனம் வாசித்துப்பார்ப்பது அதன் உரிமையே என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தொழிலாளி நிறுவனத்தின் விதிகளை மீறினார் என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், வழங்கப்பட்ட கடமையை தொழிலாளி முடித்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்துவது அவருக்கு வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளரின் உரிமையே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நிறுவன உரிமையாளர்கள் எவற்றை, எப்படி கையாள முடியும் என்பது குறித்து தமது தெளிவான கொள்கைகளை வரையரை செய்து தமது ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் மீது தங்குதடைகளின்றி வேவுபார்ப்பதிலிருந்து, தொழிலாளர்களைப் பாதுகாப்பதாக அவை இருக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை

மெஸஞ்சர் ஊடாகத் தான் மேற்கொண்ட தனிப்பட்ட இரகசிய தொடர்பாடல்களை, தனது நிறுவனம் தன் அனுமதியின்றி கைப்பற்றி படித்துப்பார்த்ததுடன், அதன் காரணமாக 2007 ஆம் ஆண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், ரொமானியாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் மூலம் அந்த நிறுவனம் தனது தனிப்பட்ட அந்தரங்கத்துக்குள் அத்துமீறித் தலையிட்டு தனது இரகசிய பரிமாற்றங்களை வேவுபார்த்த செயல் தனது அடிப்படை உரிமையை மீறியதாகவும் தெரிவித்திருந்த அவர் தனக்கு து, நீதி கோரியிருந்தார்.

இவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவரை பணி நீக்கம் செய்த அவரது முந்தைய நிறுவனம், தனது முன்னாள் ஊழியர், குறித்த யாகு மெஸஞ்சர் இணைய வழித் தகவல் பரிமாற்று சேவை கணக்கை, தொழில்முறை சார்ந்த விடயங்களுக்காக பயன்படுத்தியிருந்ததுடன், அதிலேயே தனது தனிப்பட்ட பிரத்தியேக தொடர்பாடல்களையும் பேணிவந்துள்ளதாக கூறியிருந்தது. எனவே தாம் அவரது தொழில்சார்ந்த யாஹு மெஸஞ்சர் கணக்கையே கையாண்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனம் தவறு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடுத்த தொழிலாளியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள நீதிபதிகள், ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள வேலையை சரியாக செய்து முடித்துள்ளாரா என்று பரிசீலித்து பார்ப்பதில், எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.