மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை




உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார்.
அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார்.


டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த நிலையில், 2005 ஆம் ஆண்டு 10,000 ஓட்டங்களை பெற்று மிக இளவயதில் அவ்வளவு ஓட்டங்களை பெற்றவர் எனும் பெருமையை அடைந்தார்.
குக்கின் இந்த சாதனையைத் தவிர இந்த டெஸ்ட் மற்றும் தொடரையும் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 10,000 ஓட்டங்களுக்கும் மேலாக 12 வீரர்கள் பெற்றுள்ளனர்.
அவ்வகையில் வயதின் அடிப்படையில் குறைந்த வயதில் இப்பெருமையை பெற்றுள்ளோர் பட்டியலில் குக் மற்றும் டெண்டூல்கருக்கு அடுத்து தென் ஆப்ரிக்காவின் ஜாக் காலிஸ், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையில் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் உள்ளனர்.
பிரெயின் லாரா, குமார் சங்கக்கார, ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், ஆலர் பார்டர், ஷிவ்நரெயின் சந்திரபால் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000க்கும் அதிக ஓட்டங்களை எடுத்துள்ளனர்.