அரனாயக்க பிரதேசங்களில் 15 உடலங்கள் மீட்பு




அரனாயக்க பிரதேசங்களில் இதுவரை 15 உடலங்கள் மீட்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவத்துள்ளது. 400 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

கேகாலை புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 02 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

காணாமல் போயுள்ள ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புலத்கொஹுபிட்டிய, களுபஹனவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தோட்ட குடியிருப்பு தொகுதி ஒன்று மண்ணில் புதைந்துள்ளது. 

இதனால் 06 குடியிருப்புக்கள் இவ்வாறு மண்ணுக்குள் புதைந்துள்ளதுடன், 16 பேர் வரை காணாமல் போயுள்ளனர். 

இதேவேளை அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் இணைந்துள்ளனர். 

இன்று காலை 6.00 மணி முதல் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசங்களை கண்கானிக்கும் பணிகளில் பெல் 212 என்ற ஹெலிகப்டர் ஈடுபட்டதாக விமானப் படை கூறியுள்ளது. 

இந்தக் கண்கானிப்பின் பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் படி இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளின் வழிகாட்டலுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விமானப் படை கூறியுள்ளது. 

அதன்படி மீட்புக் குழுவினர் இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் குழுவினருடன் எம்.ஐ.17 வகை ஹெலிகப்டர் ஊடாக அரநாயக்க பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.