குஜராத் தேர்தல்: முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு?




அகமதாபாத் நகரத்தின் எல்லையை நாங்கள் அடைந்தபோது மலைபோன்ற உருவம் தென்பட்டது. அது நகரத்தின் குப்பைகள் கொட்டப்படும் பகுதி. அதன் மிக அருகில் புகைக்கும், துர்நாற்றத்துக்கும் இடையே ரேஷ்மா அபா வாழ்ந்து வருகிறார்.
சிட்டிசன் நகரில், ரெஸ்மா அபா உள்ளிட்டவர்களின் குடும்பங்கள் உள்பட கலவரத்தில் இடம்பெயர்ந்த 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சிட்டிசன் நகரில் உள்ள 'ரஹத் மருத்துவமனைக்கு' வெளியே மாலை 6 மணிக்கு ரேஷ்மா அபாவை சந்தித்தேன். சமூக ஆர்வலர்களின் உதவியால் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனைதான் இப்பகுதியில் உள்ள ஒரே மருத்துவமனை. அரசு இதற்கு எவ்வித பங்களிப்பும் செய்யவில்லை.
மத்திய அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த ரேஷ்மா அபா,'' கலவரத்திற்குப் பிறகு அரசு எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. பள்ளி, மருத்துவமனை, வேலைவாய்ப்பு என எதுவும் இல்லை. 15 வருடங்களாக ஓட்டுப்போட்ட எங்களுக்கு இதுதான் கிடைத்தது. இந்த முறை ஓட்டுப்போட மாட்டோம்'' என்கிறார்.
இங்கு, ஒற்றை வீடுகள் வரிசையாக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அறைகளும், வெளியில் மின்சார மீட்டரும் உள்ளது. வடிகாலுக்கான எவ்வித வசதிகளும் இல்லை.

ரெஸ்மா அபா
Image captionரெஸ்மா அபா

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அரசுப்பள்ளி இருந்தாலும், இங்கிருந்து போக்குவரத்து வசதிகள் இல்லை.
ரஹத் மருத்துவமனைக்கு மருத்துவர்களை ஏற்பாடு செய்து நிதியளித்துவரும் அப்ரார் அலி சையத்திற்கு, 2002 கலவரம் நடக்கும்போது 22 வயது. கலவரம் ஏற்பட்டபோது, அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அப்ரார் அலி பாதுகாப்பு தேடி பலமுறை தப்பித்து ஓடியுள்ளார்.
அப்ரார் தற்போது அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். எந்தக் கட்சியையும் நம்பக்கூடாது, அதற்குப் பதில் மக்களை நம்பவேண்டும் என்பது கடந்த 15 வருடத்தில் தான் கற்ற பாடம் என அப்ரார் கூறுகிறார்.

அப்ரார் அலி சையத்
Image captionஅப்ரார் அலி சையத்

''2002க்கு பிறகு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பா.ஜ.க அரசு பாரபட்சமாக நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. 1980களில் மக்களை மத ரீதியாகப் பிரித்ததற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. தற்போது கூட ஏன் ராகுல் காந்தி முஸ்லிம் தலைவர்களை சந்திக்கவில்லை?'' என்கிறார் அவர்.
அகமதாபாத்தில் இருந்து 4 மணி நேரப் பயணத்தில் உள்ள இடத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 36 குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த இடத்தையும் அரசு அமைத்துத் தரவில்லை. இங்கும் வடிகால் வசதிகள் இல்லை.
இதற்கு நடுவிலும் 17 வயது பெண்ணான இக்ரா அஸ்லம் ஷிகரி பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். முஸ்லிம் சமூகத்தால் நடத்தப்படும் உதவிப்பள்ளியில் இவர் படித்தார்.
''ஐந்து வருடத்திற்கு முன்பும், ஊடகத்தினரும் அரசியல் தலைவர்களும் வந்தனர். ஆனால், எதுவும் மாறவில்லை. எதற்கு உங்களிடம் பேச வேண்டும்? இதனால் என்ன மாறிவிடும்?'' என்கிறார் இக்ரா.
இங்கிருக்கும் குடும்பங்களில் பெரும்பாலானவை வதோதராவில் இருந்து தப்பித்து வந்தவை. இவர்களில் சிலர் தையல்காரராக வேலை செய்வதும், ஊதுபத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தினக்கூலிக்கு வேலை செய்வதும் இவர்களது வாழ்வாதாரமாக உள்ளது.

'ரஹத் மருத்துவமனை
Image captionரஹத் மருத்துவமனை

சிட்டிசன் நகரில் இருக்கும் வீடுகளை விடவும் இங்கிருக்கும் வீடுகள் சிறியவை. இரவு நேரத்தில் ஆண்கள் வயல்வெளிக்கு சென்று தூங்க நேர்வதாகச் சொல்கிறார் சமீரா ஹுசைன்.
இடம்பெயர்ந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு ஆணை சமீரா திருமணம் செய்துகொண்டார். அவருக்கு வேறு வழியில்லை.
எட்டாம் வகுப்பு வரை அவர் படித்திருக்கிறார். கலவரத்திற்கு முன்பு முஸ்லிம் பெண்கள் இவ்வளவுதான் படித்திருந்தார்கள் என்கிறார் அவர். இப்போது அவருக்கு பத்து வயது மகளும் தவழும் மகனும் உள்ளனர்.
''எந்த கட்சியும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. நிவாரணம், வீடு என எதையும் தரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம், அவர்களுக்கு கல்வி அளிப்பதும், திறன்கள் அளிப்பதும், வேலைவாய்ப்புகள் அளிப்பதும் பிரச்சினையாகி உள்ளது,'' என்கிறார்.
கலவரத்திற்கு பிறகே முஸ்லிம் பெண்கள் தங்கள் பலத்தை உணர்திருக்கிறார்கள் என்கிறார் வக்கார் காசி.
''கலவரத்திற்குப் பிறகு முஸ்லிம் ஆண்களிடையே பயம் பரவியிருந்தது. போலீஸ், நிவாரணக் குழுக்களிடம் செல்வது, நீதி, வேலை போன்றவற்றை பெண்கள் சமாளிக்க ஆரம்பித்தனர்'' என்கிறார்.

சிட்டிசன் நகர்
Image captionசிட்டிசன் நகர்

கல்வியின் முக்கியத்துவம் தற்போது புரிந்துள்ளதால், பெண்களும் பள்ளிப்படிப்பை நிறைவு செய்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தினரும், அமைப்புகளுமே இதைப் பெரும்பாலும் சாத்தியமாக்கியுள்ளன.
சிட்டிசன் நகரில் மருத்துவமனைக்கான உதவிகளைச் செய்த அப்ரார், கல்விக்கு சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.
அத்தகைய முயற்சிகளுக்கு நிறைய முஸ்லிம் அல்லாதவர்களும் உதவி செய்கின்றனர் என்கிறார் அப்ரார். அதனால்தான் கடந்த 15 ஆண்டுகளில் அரசியலில் தேய்ந்து போன நம்பிக்கைகள், மனிதத்தின் மீது உறுதி அடைந்துள்ளது என்கிறார் அவர்.