அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு பெரும்பான்மை இல்லையென, சபாநாயகர் கரு ஜயசூரிய, சற்று முன்னர் அறிவித்தார்.

தற்போதுள்ள அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லையென, சபாநாயகர் இன்று (14) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே அமைதியற்ற நிலை தோன்றியதை அடுத்து, நாளை காலை 10 மணிவரை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட யோசனையொன்றுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை நடுவே வந்துக் கூச்சலிட்ட போதிலும், வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக, லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே, அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, பியசேன கமகே மற்றும் மனுச நாணாயக்கார ஆகியோர், எதிர்க் கட்சித் தரப்பில் அமர்ந்துகொண்டனர்.
இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், செங்கோலை எடுத்துச் செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயற்சித்தனர்.
இவ்வாறானதொரு நிலையில், சபை நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என்றும் சபாநாயகர், பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்று, தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்தார்.