‘இல்ல விளையாட்டுப் போட்டிகளை ஜன. 31க்கு முன்னர் நடத்தி முடிக்கவும்’

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் தங்கள் இல்ல விளையாட்டுப் போட்டிகளை, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்க வேண்டுமென, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றுநிரூபம் மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அச் சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இல்ல விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள் போன்றவற்றை பாடசாலை நேரத்தில் நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். போட்டிக்கான தெரிவுகளை, பாடசாலை நேரத்தில் நடத்த வேண்டுமாகவிருந்தால் குறிப்பிட்ட தினங்களில் பாடவேளைகளை 30 நிமிடங்களாகக் குறைத்து, தெரிவுகளுக்கு மிகுதி நேரத்தைப் பயன்படுத்தலாம்.
வலயமட்டப் போட்டிகள் யாவும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படல் வேண்டுமெனவும், மாகாண மட்டப்போட்டிகள், ஜுன் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கப்படல் வேண்டுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேரடியாக தேசியமட்டத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னரும், மாகாண மட்டப்போட்டிக்கான விண்ணப்பங்களை, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னரும் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
வலயமட்டத்தில் நடத்தப்பட்டு, மாகாணமட்டத்தில் நடத்தப்படும் ஏனைய குழுப்போட்டிகள், மெய்வல்லுநர் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை, ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும் எனவும், அச் சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


--- Advertisment ---