சாங்'இ-4 ,நிலவில் தரையிறங்கிய, முதல் றோபோ


நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை

சாங்'இ-4 என்ற அந்த விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) தரையிறங்கியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வட்டாரத்தின் மண்ணியல் வகையை ஆராய்வதற்கும், உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.
இந்த விண்கலம் தரையிறங்கியதை, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என்று விவரித்துள்ளது சீன அரசு ஊடகம்.
ஏனெனில் இதுவரையில் நிலவுக்கு சென்ற விண்கலங்கள் எல்லாம் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கின. இதுவரை கண்டறியப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறை.