இலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர்


இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு பிறந்த நாளன்று மரணித்தார்.
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தவர் அருட்தந்தை மில்லர். இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கைக்கு வந்தார்.
அருட்தந்தை மில்லர் - இலங்கையில் இறுதியாக வாழ்ந்த அமெரிக்க ஜேசு சபையின் இறுதித் துறவி பெஞ்சமின் ஹென்றி மில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும், அந்தக் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியினுடைய பயிற்றுவிப்பாளராகவும், பணியாற்றி வந்த அருட்தந்தை - புனித மைக்கல் கல்லூரியின் யேசு சபை இல்லத்திலேயே மரணித்தார்.
ஹென்றி மில்லர்
Image captionஅஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடல்
1873ஆம் ஆண்டு அமெரிக்க யேசு சபை மிசனரியினர் - மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை உருவாக்கினர். தனியார் பாடசாலையாக இயங்கி வந்த புனித மைக்கல் கல்லூரி, இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக்கப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்தவரும், இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கியவருமான பாலு மகேந்திரா, புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது, உபரித் தகவலாகும்


"சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையிலுள்ள மிசனரிப் பாடசாலைகளை அரசு கையகப்படுத்தியது. ஆனால், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு அருட்தந்தை மில்லர் மறுத்து, தொடர்ந்தும் தனியார் பாடசாலையாகவே சில காலம் நடத்தி வந்தார். அதன் பிறகுதான் சில நன்மைகள் கருதி அரசிடம் பாடசாலையை ஒப்படைத்தார்" என்று, பழைய நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார், புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஐ.ஜே. சில்வஸ்டர்.