அங்குரார்ப்பணம்




அம்கோர் நிறுவனத்தின் பெண்கள் மேம்பாட்டு, பெண்களின் வினைத்திறன் நடவடிக்கைகளை மேம்படுத்தல் திட்டத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றது.
பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கான சமூக அறிவூட்டல்கள் பற்றியும் “சமூக பொருளாதார அபிவிருத்திக்கான செயற்றிட்டம் 2019”' என்ற திட்டத்தின் கீழ், பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இத்திட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று (வாழைச்சேனை), கோரளைப்பற்று தெற்கு (கிரான்)  ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனூடாக சிறு தொழில் பயிற்சிநெறிகள், வாழ்க்கைத்தை மேம்படுத்தும் செயலமர்வுகள் போன்றன தெரிவுசெய்யப்பட்ட குடும்பப் பெண்களிடையே செயற்படுத்தப்படவுள்ளன. இதனால் 1,000 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நன்மையடையவுள்ளனர்.
இத்திட்ட அங்குரார்ப்பணக் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயக்குமார், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி,  அம்கோர் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பரமசிவம் முரளிதரன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் நிரந்தரமாக வாழும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பெண்களை தலைமைகளாக கொண்ட குடும்பங்கள் மற்றும் அதிக அங்கத்தவர்களை கொண்ட குடும்பங்கள் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும்.
பெண்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு காத்திரமான பங்கினை வளங்குதல், நுண் கடன், புத்தாக்க விழிப்புணர்வுகள், சுயதொழில் ஊக்கப்படுத்தல்கள், சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளல் சம்பந்தமான பல விடயங்கள் இக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.