டி10 போட்டியில் வெளுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் #WillJacks #England




இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ், டி10 போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் உள்பட 25 பந்துகளில் சதமடித்து அசத்தியிருக்கிறார். 
டி20 லீக் போட்டிகளைப் போலவே, கடந்த சில சீசன்களாக டி10 போட்டிகள் எனப்படும் 10 ஓவர்கள் கொண்ட போட்டிகள் பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்துபேட்ஸ்மேன்கள் அந்த வகையில் நடைபெறும் லீக் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருகின்றனர். இந்த வகைப் போட்டிகள், சர்வதேச அளவிலான கவனம் ஈர்த்திருக்கின்றன.  இங்கிலாந்து கவுன்டி அணிகளான சர்ரே மற்றும் லங்காஷைர் அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற டி10 போட்டி துபாயில் நடைபெற்றது. 
இந்தப் போட்டியில், லங்காஷைர் அணி பந்துவீச்சாளர்களைப் பதம்பார்த்த சர்ரே அணியின் தொடக்க வீரர் வில் ஜாக்ஸ், 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். குறிப்பாக, சர்ரே அணியின் ஸ்டீஃபன் பெர்ரி வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் உள்பட 37 ரன்கள் எடுக்கப்பட்டது. 30 பந்துகளைச் சந்தித்த வில் ஜாக்ஸ், 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. டி10 போட்டி வரலாற்றில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுவே என்றாலும், இந்த போட்டி அதிகாரபூர்வமற்றது என்பதால், சாதனையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. 
இங்கிலாந்து பேட்ஸ்மேன் வில் ஜாக்ஸ்
சதம் குறித்து பேசிய வில் ஜாக்ஸ், `டி10 போட்டியில் 120 முதல் 130 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோர் என்று போட்டிக்கு முன்னதாகப் பேசிக்கொண்டிருந்தோம். அதனால், அதைத்தாண்டி ரன் குவிக்க முடியுமா என்ற முயற்சியில் நான் ஈடுபட்டேன். 98 ரன்கள் எடுக்கும்வரை நான் சதம் குறித்து சிந்திக்கவில்லை. எல்லாம் விரைவாக நடந்து முடிந்துவிட்டது’ என்றார். 
டி20 போட்டிகளைப் பொறுத்தவரை கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், புனே வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்துவருகிறது. அந்தப் போட்டியில் 66 பந்துகளைச் சந்தித்த கெய்ல், 175 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்தப் போட்டியில், கெய்ல் 17 சிக்ஸர்கள் அடிக்க, ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை 21 சிக்ஸர்களுடன் ஆர்.சி.பி பெற்றது. அதேபோல, அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்கள் குவித்த ஆர்.சி.பி, 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது,