வேலி தாண்டி வந்தனர்,வாக்களிப்பக்காக




இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அஸ்ஸாம் மாநில கிராமம் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளது.

இந்த மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ஜ் மக்களவைத் தொகுதி இந்திய - வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இரு நாட்டுக்கு இடையிலான சர்வதேச எல்லைக் கோட்டில் மிகச்சரியாக இந்தியாவால் அங்கு எல்லை வேலி அமைக்க முடியவில்லை.

Image caption
எல்லைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் மு.ச.மணிவண்ணன்.
எனவே கொஞ்சம் தள்ளி உட்புறமாக எல்லை வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது எல்லை வேலிக்கு வெளியில்தான் சர்வதேச எல்லைக்கோடு செல்கிறது. இப்படி எல்லை வேலி உட்புறமாக அமைக்கப்பட்டதால், லஃபாசல் என்கிற அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இந்திய கிராமம் எல்லை வேலிக்கு வெளியே அமைந்துள்ளது.

எல்லை வேலிக்கும் - எல்லைக் கோட்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ள இந்த கிராம மக்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்லவேண்டுமென்றால் எல்லை வேலியில் அமைந்துள்ள பாதுகாப்புச் சாவடியை கடந்துதான் செல்லவேண்டும்.

இந்த சாவடி தினமும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறுகிற இரண்டு நாள்கள் மட்டும் இரவு எட்டு மணி வரை இந்த சாவடி திறந்திருக்கும் என்கிறார் கரீம் கஞ்ஜ் மாவட்ட ஆட்சியர் மு.ச.மணிவண்ணன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலரான இவர், தேர்தலை ஒட்டி சில நாள்களுக்கு முன்புதான் மாவட்ட ஆட்சியராகவும், இந்த தொகுதியின் தேர்தல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.

Image caption
கரீம்கஞ்ச் நகரின் நடுவில் ஓடும் ஆறு. ஒருபுறம் இந்தியா, மறுபுறம் வங்க தேசம்.
லஃபாசல் கிராமத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 479 பேர் குடியிருக்கிறார்கள். இவர்களில் 169 பேர் வாக்காளர்கள். இவர்களில் 132 பேர் எல்லைச் சாவடியைக் கடந்து வந்து தஸ்னாலி முக்தப் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்தனர் என்கிறார் மணிவண்ணன்.

மாவட்டத் தலைநகரமான கரீம் கஞ்ச் நகராட்சிப் பகுதியில் ஓடுகிற ஒரு ஆறு இந்திய வங்க தேச எல்லையாகவும் செயல்படுகிறது. ஆற்றுக்கு இந்தப் பக்கம் இந்தியா - அந்தப் பக்கம் வங்கதேசம் என்று தகவல்கள் கூறுகின்றன