200 ரூபாய் கடனை அடைக்க இந்தியா வந்த கென்ய நாடாளுமன்ற உறுப்பினர்




மகாராஷ்டிராவில் உள்ள மளிகைக் கடையில் 22 ஆண்டுகளுக்குமுன், தான் வைத்த 200 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, கென்ய நாட்டைச் சேர்ந்த எம்.பி., இந்தியா வந்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஃப்ரிக்க நாடான கென்யாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் நியாககா டோங்கி. இவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இவர், 1985 - 89 வரை, மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாதில் உள்ள மவுலானா ஆஸாத் கல்லுாரியில் நிர்வாகத் துறையில் பட்டப்படிப்பு படித்தார்.
அப்போது, அவுரங்காபாதில் ரிச்சர்ட் தங்கியிருந்த வீட்டின் அருகே, காசிநாத் காவ்லி என்பவர், மளிகை கடை நடத்தி வந்தார். அங்கிருந்து, தனக்கு தேவையான பொருட்களை, ரிச்சர்ட் கடனில் வாங்கி வந்தார். இந்நிலையில், 1989ல் படிப்பு முடிந்தவுடன், ரிச்சர்ட் கென்யாவுக்கு திரும்பினார். ஊர் திரும்பிய பின், காசிநாத்துக்கு, 200 ரூபாய் மளிகை பாக்கி தர வேண்டும் என்பது, ரிச்சர்ட்டின் நினைவுக்கு வந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்தியா சென்று, அதை திருப்பித் தர வேண்டும் என, மனதிற்குள் நினைத்துக் கொண்டார். பின், கென்யாவில் எம்.பி., ஆனார்.
22 ஆண்டுகளுக்கு பின், 200 ரூபாய் பாக்கியை திருப்பிக் கொடுப்பதற்காகவே, அவர் தன் மனைவி மிச்சேல் உடன் இந்தியா வந்தார். இங்கு, காசிநாத் காவ்லியை சந்தித்து, 200 ரூபாயை திருப்பிக் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத காசிநாத், பழைய நினைவுகளில் நெகிழ்ந்தார்.


வெறும், 200 ரூபாய் கடனை, 22 ஆண்டுகளுக்குபின் திருப்பிச் செலுத்த, பல்லாயிரம் கி.மீ., துாரம் பயணித்து வந்த கென்யா நாட்டு, எம்.பி.,யின் நேர்மை, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.