தோனி முன்பே இறக்கப்படாதது ஏன்? ஷமி தவிர்க்கப்பட்டது ஏன்? - ரவி சாஸ்திரியை நோக்கி கேள்வி


உலகக்கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதைத் தொடர்ந்து தோனியின் மெதுவான பேட்டிங் மற்றும் முக்கிய போட்டிகளில் ரோஹித் மற்றும் விராட் சரிவர விளையாடாதது குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் இதில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பங்கு என்ன இதுவே இப்போதைய கேள்வி.
மார்ச் மாதம் 26, 2015 சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதிபோட்டியில் தோற்றது.
விராட் கோலி வருத்தத்துடன் பெவிலியனில் இருந்தபோது கேப்டன் மஹேந்திர சிங் தோனி ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள் தெரிவிக்க மைதானத்துக்கு உள்ளே சென்றார். ரவி சாஸ்திரி இந்திய வீர்ர்களை பாராட்ட அங்கே வந்தார்.
53 வயதான ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குனராக 2014 முதல் 2016 வரை இருந்தார். 2016 ல் இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக நியமனம் ஆனார்.
அனில் கும்ப்ளே 2017 ஜுன் வரை இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அப்போது அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பத்திரக்கைகளில் வந்து கொண்டிருந்தது.
அதன்பின் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியபிறகு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது அவர் இந்திய அணியுடன் இல்லை.
ஆனால் கும்ப்ளேவின் தலைமையில் 17 டெஸ்ட் போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றிபெற்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி.
ரவி சாஸ்திரி அதன் பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் வந்தார். இது கேப்டன் மற்றும் பிற சில மூத்த வீரர்களால் ஆதரிக்கப்பட்டது என நம்பப்பட்டது.
ரவி சாஸ்திரி ஒரு பயிற்சியாளராக இந்தியாவை சிறப்பாக அரையிறுதி வரை வழிநடத்தி சென்று அணியை புதிதாக உருவாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ரவி சாஸ்திரி அதை சரியாக செய்தார்.
சஞ்சய் பாங்கரை பேட்டிங் பயிற்சியாளராக நீடிக்க செய்ததுமட்டுமல்லாமல் அவரை அணியின் உதவி பயிற்சியாளராக செய்தார்.
மேலும் சாஹிர் கானுக்கு ஆதரவு இருந்த போது அவர் பரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தார்.
மற்ற பயிற்சியாளர்களுடன் ரவி சாஸ்திரி மற்றும் கோலிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியா வெளிநாடுகளில் ஆட வேண்டும் அப்போதுதான் இளம் வீரர்களுக்கு அந்த சூழ்நிலை பழகும் என வலியுறுத்தினார்.
இந்திய வீர்ர்களுக்கு அவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறனை வளர்க்க அவர்களின் பாணியில் ஆட சுதந்திரம் தந்தார்.
உலகக்கோப்பை 2019 ல் அவர் எடுத்த சில முடிவுகளால் அவர் எதிர்காலத்தில் விமர்சிக்கபடலாம்.
இந்திய முன்னாள் கிரிகெட் வீரர் ஃபாரூக் இஞ்சினியர் பிபிசியின் நேர்காணலில் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலியிடம் சில முக்கிய கேள்விகளை எழுப்பினார்.
" ஏன் ரிஷப் பண்ட் தொடக்கத்தில் அணியில் இல்லை? ஏன் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டப்போது அணியின் தேர்வு சரியாக இல்லை?" என கேட்டிருந்தார்.
அணியின் பயிற்சியாளரும் இந்த தோல்விக்கு காரணமா? என கேட்டபோது, “இதற்கு ரவியை மட்டும் சொல்ல முடியாது. அன்று அணிக்கு ஒரு நல்ல நாளாக இல்லை. ஆனால் அணியின் தேர்வும் ஒரு குறிப்பிடப்படவேண்டிய காரணம்” என பதிலளித்தார்.
கடந்த 2 வருடங்களாக ரவி சாஸ்திரியும் கோலியும் அணியின் தேர்வு நேர்மையான முறையில் நடந்தது என கூறும்போது நமக்கு இரண்டாவது கேள்வி எழுகிறது.
கோலி மற்றும் ரவி சாஸ்திரிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறப் போகிறது என அனைவரும் அறிவர். அங்கே பந்து இயல்பாகவே சுழலும். அப்படியிருக்க புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே போன்ற வீரர்களை ஏன் தேர்வு செய்யவில்லை?
அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி புஜராவின் ஆட்டத்தை பற்றியும் அவர் சுழற்பந்தை எதிர்கொள்ளும் தன்மையைப் பற்றியும் நன்றாகவே அறிவார்.
அதேபோல் ரஹானே மெதுவான பந்துவீச்சு சூழலில் தன்னுடைய நிலையான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திருக்கிறார்.
கடந்த ஐபிஎலில் அதிரடியாக ஆடி விறுவிறுப்பாக ரன்கள் குவித்து தன்னை விமர்சித்தவர்களை தவறு என நிரூபணம் செய்துள்ளார்.
நல்ல அனுபவம் மிக்கவரான அம்பத்தி ராயுடுவும் அணியில் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் உலகக்கோப்பை நடந்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
ஆனால் இந்திய அணியில் சிறிதும் அனுபவம் இல்லாத விஜய் சங்கர், மயான்க் அகர்வால், மற்றும் குறைந்த பங்களிப்பு செய்த ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்தனர். அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் யார் பொறுப்பேற்பார்கள்?
தேர்வாளர்கள், கேப்டன், மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் கிரிக்கெட் அனுபவம் வாய்ந்தவர்கள்.
மற்றுமொரு கேள்வி இரண்டு நாட்களுக்கு முந்தியதுதான். ஆனால் இப்போதும் கேட்கலாம்.
ரோஹித், விராட் மற்றும் ராகுல் போன்ற நல்ல வீரர்கள் முதலில் ஆட்டமிழந்தவுடன் மைதானத்தில் நின்று விளையாட தோனி போன்ற அனுபவம் நிறைந்த வீரரை ஏன் களம் இறக்கவில்லை?
தோனியை பண்ட், பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கு பிறகு ஏழாவதாக களம் இறக்கியது அந்த நாளின் மிகப் பெரிய தவறு.
ஹார்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் தேவைப்பட்ட கடைசி ஓவர்களில் அவர்கள் யாரும் இல்லை.
முன்னாள் இந்திய வீரர் கங்குலி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் போன்றவர்களும் இந்த கருத்தை கூறினர்.
”தோனியை தாமதமாக அனுப்பியது மிகப்பெரிய தவறு. அவர் ரிஷப் பண்ட்டுடன் இணை சேர்ந்து விளையாடிருந்தால் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோரின் விக்கெட்டுகள் போகாமல் இருந்திருக்கும்” என தொலைக்காட்சியில் வர்ணனை செய்யும்போது கூறினார் விவிஎஸ் லக்ஷ்மண்.
சவுரவ் கங்குலியும் இதை ஒப்புக்கொண்டார்.
"தோனி இந்த இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தவுடன் வந்திருக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
கடைசி கேள்வி அணி நிர்வாகம் மைதானத்தின் பிட்சை சரியாக கணித்ததா?
அணியின் பயிற்சியாளர் நெட் பயிற்சியின் போது பிட்சை பார்த்தார்.
பயிற்சி ஆட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அந்த பிட்சில் விக்கெட் எடுப்பது சுலபமாக இருந்தால் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹலுக்கு பதிலாக முகமது ஷமியை எடுத்து அணிக்கு பலம் சேர்த்திருக்கலாம்.
ஜடேஜா ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கான பங்கை சிறப்பாக செய்தார். அவர் 10 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டகாரரான ஹென்ரி நிகோலஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆனால் யுவேந்திர சாஹல் 10 ஒவரில் 63 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
முகமது ஷமி இந்த தொடரில் 4 ஆட்டங்களில் ஆடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆனால் அவர் அரை இறுதி ஆட்டத்தில் இல்லாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கிரிக்கெட் ஒரு விளையாட்டு. இதில் ஒரு தனிநபரை குறைகூறுவதில் அர்த்தமில்லை.
ஆனால் கேப்டன் மற்றும் பிற வீரர்கள் அவர்கள் செய்யும் தவறுக்கு விமர்சிக்கப்படும்போது தலைமை பயிற்சியாளரும் கேள்வி கேட்கப்பட வேண்டும்.
"ஒரு தோல்வியை மறப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை ஆராய்ந்தால் நிறைய கேள்விகள் பிறக்கும். கடைசி நேரத்தில் ஃபீல்டர் கையில் பந்து இருப்பது தெரிந்தும் தோனி ஏன் அந்த இடத்தில் வேகம் காட்டவில்லை. ஜடேஜா நல்ல நிலையில் விளையாட இருந்தும் ஏன் அவர் முதலிலேயே அணியில் இடம் பெறவில்லை?. இதெல்லாம் சிந்திக்கவைக்கிறது." என ஃபாரூக் இஞ்ஜினியர் கூறியுள்ளார்.