மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2019




பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2019 இன் ஆரம்ப நாள் நிகழ்வு  சனிக்கிழமை (20) நிந்தவூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ் ஆரம்ப நாள் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து துடுப்பெடுத்தாடி இச்சுற்றுப்போட்டியினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இதன்போது அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி ஏ.எல்.எப் ரகுமான், கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எம். ஜவ்பர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் அறுவைச்சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சித்தீக் ஜெமீல், பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ரி.எஸ்.ஆர்.ரி.ஆர் றஜாப், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.எப்.ஏ. ஹலீம், சுற்றுப்போட்டி எற்பாட்டுக் குழுத் தலைவர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்தியத்திலுள்ள மத்திய மற்றும் மாகாண நிருவாகங்களின் கீழுள்ள ஏழு ஆதார வைத்தியசாலைகளின் அணிகள் மற்றும் பிராந்திய பணிமனை அணியுமாக எட்டு அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டி 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு நொக்கவுட் முறையில் நடைபெற்றது.

அதற்கமைவாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அணியினை எதிர்த்து கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினரும் கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அணியினரும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து அக்கரைப்பத்து ஆதார வைத்தியசாலை அணியினரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணியினரும் மோதினர்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி 7.5 ஓவர்களை பூர்த்தி செய்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினர் 2.4 ஓவர்களை பூர்த்தி செய்த நிலையில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டனர். இதன்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி சகல பந்து வீச்சுக்களும் பூர்த்தியடைந்த நிலையில் 6 விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களை பெற்றிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணி 3.5 ஓவர்களை பூர்த்தி செய்த நிலையில் 3 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி சகல ஓவர்களும் பூர்த்தியடைந்த நிலையில் 6 விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் ஆதார வைத்தியசாலை ஆணியினர் சகல ஓவர்களும் பூர்த்தியடைந்த நிலையில் 9 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியினர் சகல பந்து வீச்சுக்களும் பூர்தியடைந்த நிலையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அணி சகல பந்து வீச்சுக்களும் பூர்தியடைந்த நிலையில் 7 விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவிக்கொண்டது.

அந்தவகையில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அணியினரை எதிர்த்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அணியினரும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அணியினரை எதிர்த்து கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை அணியினரும் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் இன்றைய தினம் (21) ஞாயிற்றுக்கிழமை காலை வேளையிலும் இறுதிப்போட்டி மாலையிலும் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.