‘சரவண பவன்’ ராஜகோபால் காலமானார்


உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
2009-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
சரவணபவன் ஹோட்டல் குழுமத்துக்கு உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. நியூ யார்க், லண்டன், சிட்னி போன்ற பெரு நகரங்களிலும் இந்த ஹோட்டலுக்கு கிளைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குழுமத்தில் பணிபுரிகின்றனர்.
ஜோதிடர் ஒருவரின் ஆலோசனை பேரில் தனது பணியாளர்களில் ஒருவரின் மனைவியை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாக கூறப்பட்டது.
'சரவண பவன்' ராஜகோபால் காலமானார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடந்த 2001-இல் இப்பெண்ணின் கணவர் காணாமல்போன நிலையில், அதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். பின்னர் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டில் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியதாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது.
2004-ஆம் ஆண்டில் ராஜகோபாலுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக 2009-இல் உயர் நீதிமன்றம் அதிகரித்தது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.