கன்னியா வெந்நீரூற்று விவகாரம்: நீதியின் பிரகாரம் தீர்வு வேண்டும்!




“திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்துக்கு ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். நீதியின் பிரகாரம் தீர்வு காணப்படவேண்டும். அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எதனையும் சிங்கள – பௌத்த சகோதரர்கள் பிரயோகிக்கக்கூடாது.”
– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
தமிழர் பிரதேசங்களில், தமிழர்களின் விருப்பமின்றி விகாரைகள் அமைக்கப்படாது. தமிழர்கள் விரும்பாவிடின் அவர்கள் நீதிமன்றத்தையோ பொலிஸையோ நாடத்தேவையில்லை. நாமே அத்தகைய விகாரைகளை அகற்றுவோம் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கன்னியாவில் தமிழ் மக்கள் நேற்றுப் போராட்டம் நடத்தியிருந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது, சிங்களவர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டிருந்தது. இது தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
“தமிழ் – சிங்களவர்களுக்கிடையிலோ, இந்து – பௌத்த மதத்தினர்களுக்கிடையிலோ எவ்வித முரண்பாடுகளும் ஏற்படக்கூடாது. ஜனநாயக வழியில் – நீதியின் பிரகாரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இரு இனத்தவர்களும் – இரு மதத்தினர்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.