இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது எப்படி?


உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிபோட்டியொன்று இவ்வளவு பரபரப்பாக முடியக்கூடும் என நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்களா?
பரபரப்பான இறுதிப்போட்டியில் வென்று இங்கிலாந்து முதல் முறையாக உலகக்கோப்பையை தன் வசமாக்கியிருக்கிறது.

நேற்று என்ன நடந்தது?

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா 46 நாள்களுக்கு பின் முடிவுக்கு வந்திருக்கிறது. 10 அணிகள் மோதி, 48 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்தபிறகு உலகக்கோப்பையின் சாம்பியன் யார் என்பது தெரியவந்திருக்கிறது.
ஆனால் நியூசிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வெற்றி வித்தியாசம் வெறும் சில 'சென்டி மீட்டர்கள்' மட்டுமே.
1999 உலகக்கோப்பையின் அரை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கவும் ஆஸ்திரேலியாவும் மோதின. 'டை' யில் முடிவடைந்த அப்போட்டி இரண்டு தசாப்த காலமாக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது.
அந்த வரிசையில் 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்னும் பல தசாப்த காலங்களுக்கு ரசிகர்கள் என்றும் நினைவில் வைத்திருக்கக்கூடிய போட்டியாக அமைந்துவிட்டது.
50 ஓவர்கள் முழுமையாக ஆடி ஒரு அணி இலக்கு வைக்க, எதிரணியும் அதே 50 ஓவர்களில் அதே ரன்களை விளாசுகிறது.
இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் இரு அணிகளும் ஒரே ரன்களை விளாசுகின்றன. இதனால் போட்டியில் யார் அதிகம் பௌண்டரிகளை விளாசினார்கள் என்பது கணக்கிடப்பட்டு அதனடிப்படையில் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைNICK ATKINS
வழக்கத்துக்கு மாறாக மிகவும் விநோதமாக கிடைத்த ஒரு முடிவு பல ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதே சமயம் கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டுகளாக கிரிக்கெட் விளையாடிவரும் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லையே எனும் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் இருந்ததை போக்கும் வண்ணமாக நேற்றைய போட்டி அமைந்தது.
இங்கிலாந்து அணி 1979, 1987, 1992 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. இந்த சூழலில்தான் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியைச் சந்தித்தது.
1987 உலகக்கோப்பையில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்து முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
1992 உலகக்கோப்பையிலும் சேஸிங்கில் இங்கிலாந்து தோற்றது.
1987-க்கும் பின் நடந்த ஏழு உலகக்கோப்பைத் தொடர்களில் கிட்டத்தட்ட அனைத்து இறுதிப்போட்டிகளிலும் ஏதாவதொரு அணிதான் மிகப்பெரிய அளவு கோலோச்சியது. 2011-ல் மட்டும் இலங்கை இந்தியாவுக்கு சற்று கூடுதல் நெருக்கடி தந்திருந்தது.
ஆனால் 32 ஆண்டுகளுக்கு பின்னர் இறுதிப்போட்டியொன்று ரசிகர்களின் இதயத்துடிப்பை அநியாயத்துக்கு பதம் பார்க்கும் விதமாக நடந்து முடிந்திருக்கிறது.
1979, 1987, 1992 என மூன்று உலகக்கோப்பைகளிலும் இங்கிலாந்து சேஸிங்கில் தோல்வியடைந்திருந்தது. 2015 உலகக்கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தோல்வியடைந்திருந்தது.
இந்தச் சூழலில்தான் இம்முறை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தும் - இங்கிலாந்தும் மோதின.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைMICHAEL STEELE
இம்முறை டாஸ் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மைதானத்தில் ஈரப்பதம் இருந்தபோதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் அரை இறுதி வரையில் இரண்டு முறை மட்டுமே முதலில் பேட்டிங் செய்து வென்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்திலும், இந்தியாவுடனான போட்டியில் தோனி அவுட் ஆன பின்னர் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதே வேளை இங்கிலாந்து அணி அரை இறுதியில் சேஸிங்கில் ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தியது.
நியூசிலாந்து பேட்டிங் - இங்கிலாந்து சேஸிங் என்றபோதே இது மிகவும் சுவாரஸ்யமாக அமையப்போகிற போட்டியாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இவற்றை கேன் வில்லியம்சன் படையும் மோர்கன் படையும் பொய்த்துப்போகச் செய்யவில்லை.

கட்டம் - 5 : சூப்பர் ஓவர் - நம்பக் கடினமான நிகழ்வுகள்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் முதல் முறையாக சூப்பர் ஓவர் முறை நேற்று கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவர் விதிகளின் படி போட்டியில் சேசிங் செய்த அணியே முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால் இங்கிலாந்து களமிறங்கியது.
பட்லர் - ஸ்டோக்ஸ் இங்கிலாந்து சார்பில் களமிறங்கினர். இதில் மிகப்பெரிய ஆச்சர்யமில்லை. ஏனெனில் இந்த இருவரும் தான் போட்டியில் நியூசிலாந்து பௌலர்களை எதிர்கொண்டு அரை சதம் விளாசியவர்கள்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீசியவர் - டிரென்ட் போல்ட்
முதல் பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். மூன்று ரன்கள் வந்தது. இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார் பட்லர். மூன்றாவது பந்தை பௌண்டரிக்கு விரட்டினார் ஸ்டோக்ஸ். நான்காவது பந்தில் ஃபெர்குசனின் துடிப்பான ஃபீல்டிங்கால் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் பட்லர். ஆறாவது பந்தை ஃபுல் டாஸாக வீசினார் - வலுவான கைகளை கொண்டு பௌண்டரி விளாசினார் பட்லர்.
இங்கிலாந்து குவித்த ரன்கள் - 15
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைMIKE HEWITT
போட்டியின் கடைசி ஓவரில் போல்ட்டின் பந்துவீச்சை எதிர்கொண்டு 15 ரன்கள் எனும் இலக்கை இங்கிலாந்தால் தொட முடியவில்லை. ஆனால் சூப்பர் ஓவரில் அதே போல்ட் பந்துவீச்சில் 15 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
சேஸிங்கில் நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷமும் மார்ட்டின் கப்டிலும் களமிறங்கினர்.
நியூசிலாந்து அணியின் நம்பகமான பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் களமிறங்கவில்லை. 16 ரன்கள் அதிரடியாகச் சேர்க்க வேண்டும் எனும் காரணத்தால் முதலில் பந்துகளை எளிதில் சிக்ஸர்களுக்கு விரட்டும் திறன் படைத்த இவ்விரு வீரர்களை அனுப்பினார் வில்லியம்சன்.
அப்போதே நியூசிலாந்து அணிக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அது என்னவெனில் 16 ரன்களுக்கு ஒரு ரன் குறைவாக எடுத்தாலும் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்பதே.
ஏனெனில் 50 ஓவர்கள் கொண்ட அப்போட்டியிலும் சூப்பர் ஓவரையும் சேர்த்து 26 பௌண்டரிகளை விளாசியிருந்தது இங்கிலாந்து அணி.
நியூசிலாந்து அணி 17 பௌண்டரிகளை மட்டுமே எடுத்திருந்தது.
சூப்பர் ஓவர் 'டை' ஆனால் அதிகம் பௌண்டரிகள் அடித்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது ஐசிசியின் விதி.
இந்தச் சூழலில்தான் நீஷம் - கப்டில் கூட்டணிக்கு பந்துவீச ஆர்ச்சரை அழைத்தார் மோர்கன்.
முதல் பந்துக்கு சற்று கறாராக வைடு கொடுத்தார் நடுவர். இதனால் அடுத்த ஆறு பந்துகளில் இங்கிலாந்து அடித்த அதே 15 ரன்களை எடுத்தாலே நியூசிலாந்து அணியின் கைகளில் உலகக்கோப்பை தவழும் சூழல் உருவானது.
முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் நீஷம். இரண்டாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார்.
இரண்டே பந்தில் நியூசிலாந்தின் ஸ்கோர் 9 ரன்கள். இன்னும் 4 பந்துகளில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் சூழல் நிலவியது.
சூப்பர் ஓவரின் மூன்றாவது பந்தை ஒருவழியாக ஃபீல்டிங்கில் சமாளித்து இரண்டு ரன்கள் மட்டும் கொடுத்தது இங்கிலாந்து அணி.
நான்காவது பந்திலும் இரண்டு ரன்கள் எடுத்துவிட்டார் நீஷம்.
இரண்டு பந்துகள் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலை - நியூசிலாந்துக்கு சற்று எளிதான சூழலே.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைPAUL ELLIS
ஓவரின் ஐந்தாவது பந்தில் நீஷமால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த ஒரு பந்து சூப்பர் ஓவரின் போக்கையே மாற்றியது.
இப்போது கடைசி பந்தை எதிர்கொள்ளும் கப்டில் இரண்டு ரன்கள் எடுத்தே ஆக வேண்டும் எனும் நிலை. காலை பதம் பார்க்க வந்த பந்தை டீப் ஸ்கொயர் திசையில் அடித்தார் கப்டில். ராய் விரைவாக செயல்பட்டு பந்தை பட்லர் இருக்கும் ஸ்டம்ப் நோக்கி வீசினார்.
அது நேரடியாக சிறப்பாக எறியப்பட்ட பந்து அல்ல. ஆனால் பட்லர் துடிப்பாக செயல்பட்டு ரன் அவுட் செய்தார்.
அப்போது மார்ட்டின் கப்டிலின் பேட் எல்லையில் இருந்து சில சென்டி மீட்டர்கள் தொலைவில் மட்டுமே இருந்தது.
இடிந்து போனார் கப்டில்.
கொண்டாடித் தீர்த்தனர் இங்கிலாந்து வீரர்கள். ஐரோப்பிய நாடொன்று முதல் முறையாக கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வென்றது.

கட்டம் - 4 : இறுக்கிப்பிடித்த நியூசிலாந்து

ஆறு ஓவர்கள் - அதாவது 36 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்து அணியின் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது.
பட்லரும் - ஸ்டோக்ஸும் அரை சதமடித்து நல்ல நிலையில் இருந்தனர்.
ஃபெர்குசன் வீசிய 45-வது ஓவரில் பட்லர் பௌண்டரி அடிக்க முயற்சி செய்ய அப்போது மாற்று வீரராக களத்தில் இருந்த சவுத்தீ சற்று கடினமான ஒரு தாழ்வான கேட்ச் பிடித்தார்.
நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான சவுத்தீக்கு அணியில் இடம் கிடைக்காத போதும் அபாரமான ஃபீல்டிங்கால் எதிரணியின் வெற்றி வாய்ப்பை மங்கச் செய்தார்.
47-வது ஓவரை வீசிய ஃபெர்குசன் ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீச முயன்றார். லெக் கட்டர், குட் லெங்த், ஃபுல் லெங்த் என வித்தியாசம் காட்டினார். அந்த ஓவரில் வோக்ஸ் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.
போல்ட்டின் 48-வது ஓவரில் பத்து ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR
கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி - இங்கிலாந்துக்கு கை வசம் ஆறு விக்கெட்டுகளும் இருந்தன.
நீஷம் வீசிய 49 -வது ஓவரின் மூன்றாவது பந்தில் பிளங்கட் அவுட் ஆனார். அதற்கடுத்த பந்திலேயே ஸ்டோக்ஸ் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார் போல்ட். ஆனால் தவறுதலாக பந்தை பிடித்தவாறே எல்லைக்கோட்டையும் தடுமாறித் தொட்டு விட்டார்.
நடுவர் சிக்ஸர் என்றார்.
இங்கிலாந்துக்கு ஆறு ரன்கள் கிடைத்தது - மற்றொரு முக்கிய சேதி ஸ்டோக்ஸ் அவுட் ஆக வில்லை என்பது.
நியூசிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகரித்தது.
நீஷம் பதற்றப்படாமல் ஒரு வேகம் குறைந்த பந்தில் ஆர்ச்சரை டக் அவுட் ஆக்கி அனுப்பினார்.
போல்ட் கையில் பந்தை திணித்தார் வில்லியம்சன். அவருக்கான வேலை இங்கிலாந்தை 15 ரன்கள் எடுக்க விடக்கூடாது என்பதே. இங்கிலாந்து அணி ஸ்டாக்ஸை நம்பியிருந்தது.
முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் இல்லை . மூன்றாவது பந்தை முடிந்த மட்டும் கடுமையாக விளாசினார். ஃபில்டர் சரியாக பந்தை ஸ்டம்பை நோக்கி ஏறிய, அப்போது எல்லைக்குள் நுழைவதற்காக ஸ்டோக்ஸ் தாவ எத்தனிக்க பந்து அவரது பேட்டில் பட்டு பௌண்டரிக்குச் சென்றது.
இரண்டு ரன்கள் மட்டுமே கிடைக்க வேண்டிய அந்த பந்தில் ஆறு ரன்கள் வந்தது. நடப்பதை சுதாரிப்பதற்கே கடினமான வகையில் காட்சிகள் அரங்கேறின.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைMICHAEL STEELE
இந்த இரண்டு பந்துகளில் ஆட்டம் எளிதாக இங்கிலாந்து பக்கம் திரும்பியது, கைவசம் இரண்டு விக்கெட்டுகள் உள்ள சூழலில் இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் அவ்வளவு தான்.
போல்ட் வீசிய ஐந்தாவது பந்தில் அடில் ரஷீத் ரன் அவுட். ஆறாவது பந்தில் மார்க் வுட் ரன் அவுட் ஆனார்.
50-வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. ஆனால் அந்த ஓவரில் 14 ரன்கள் குவித்திருந்தது.
நியூசிலாந்து, இங்கிலாந்து இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.

கட்டம் -3 : நங்கூரமாய் நின்ற பட்லர் - ஸ்டோக்ஸ்

ஆட்டத்தின் 24 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கைத் தந்தவர்கள் பட்லரும் ஸ்டோக்ஸும்தான்.
ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா என பெரும்பாலான அணிகள் இந்த உலகக்கோப்பையில் மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டதால் தோல்வியைத் தழுவியுள்ளன. இந்திய அணியின் மிடில் ஆர்டர் விவகாரம் இன்றும் பேசுபொருளாக உள்ளது.
இந்நிலையில் தான் நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்தும் கூட இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய இரண்டு நல்ல பேட்ஸ்மென்கள் இருந்தனர்.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைGLYN KIRK
இன்னும் ஒரு விக்கெட் வீழ்ந்தாலும் கிறிஸ் வோக்ஸ் முதலான பந்து வீச்சாளர்கள் பேட்டிங்கில் களமிறங்க வேண்டும் என்ற சூழல். பட்லர் தனது இயல்பான ஆட்டத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் துவங்க, அவருக்கு பக்க பலமாக விளையாடினார் ஸ்டோக்ஸ்.
இந்த இணை பந்துகளை வீணடிக்கவும் இல்லை, ரன்கள் சேர்க்கவும் தவறவில்லை.
துவக்கத்தில் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்த இணை அவ்வப்போது பௌண்டரிகளையும் விளாசியது.
மற்ற அணிகளுக்கும் ஒரு சாம்பியன் அணிக்கும் வித்தியாசமாக விளங்கியது இங்கிலாந்தின் மிடில் ஆர்டர்தான்.
இவ்விருவரும் இணைந்து 130 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்தனர்.
கேன் வில்லியம்சன் படை இந்த இணையை எளிதில் பிரிக்கத் தவறியதே ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்ள முதல் காரணம்.

கட்டம் - 2 : தளராத நியூசிலாந்து பௌலர்கள்

242 ரன்கள் எடுத்தால் வெற்றி; கைவசம் 10 விக்கெட்டுகள் ; பல முறை ஆடிப் பழக்கப்பட்ட மைதானம் - இதனால் சேஸிங்கில் சற்று தைரியமாக விளையாடலாம் எனும் சூழல்.
பேர்ஸ்டோ - ஜேசன் ராய் இணை களமிறங்கியது.
2019 உலகக்கோப்பைத் தொடரில் பல முறை நூறு ரன்களுக்கு மேல் சேர்த்தது இந்த இணை.
பவர்பிளேவை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்பது அவ்விருவர் முன் இருந்த சவால். ஏனெனில் இந்திய அணியை பவர்பிளேவில் முடக்கினர் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள்.
முதல் பந்தையே தனது புத்திசாலித்தன ஸ்விங் மூலம் ராயை திணறடித்தார். எல் பி கேட்டார் போல்ட். நடுவர் மறுத்தார். மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ கேட்டார் வில்லியம்சன். கள நடுவர் அளித்த தீர்ப்பே செல்லும் என தீர்ப்பு வந்தது.
முதல் பந்திலேயே தப்பினார் ஜேசன் ராய் .
அடுத்த ஓவரில் ஹென்றியும் அச்சுறுத்தினார். ஆனால் பௌண்டரிகள் விளாச துவங்கினார் ராய்.
முதல் ஐந்து ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து 24 ரன்கள் எடுத்திருந்தது.
ஆறாவது ஓவரில் ராயை வீழ்த்தினார் ஹென்றி.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைMICHAEL STEELE
பேர்ஸ்டோவுடன் - ஜோ ரூட் இணைந்தார்.
இதன்பின்னர் நியூசிலாந்து வீரர்கள் ஒரு பந்தை கூட தவறான லெங்த்தில் வீசக்கூடாது எனும் முனைப்பில் மிகச்சிறப்பாக வீசினர். இங்கிலாந்து அணியின் ரன் வேகம் மெதுவாக மட்டுப்பட்டது.
17-வது ஓவரில் ரூட் விக்கெட்டை சாய்த்தார் காலின் டி கிரந்தோம். கிட்டத்தட்ட இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் ஆணி வேரை அவர் சாய்ந்ததும் நியூசிலாந்து அணியின் கை ஒங்கத் துவங்கியது.
அதன் பின்னர் அடுத்த ஏழு ஓவர்களில் பேர்ஸ்டோ, மோர்கனையும் பெவிலியனுக்கு அனுப்பியது வில்லியம்சன் படை.
காலின் டீ கிரந்தோம் ஒரு முனையில் ரன்கள் கொடுக்காமல் கடும் நெருக்கடி தந்தார்.
இங்கிலாந்து அணி எந்த ஒரு பந்துவீச்சாளரையும் இலக்கு வைத்து ரன்கள் சேர்க்க முடியாதபடி அனைவருமே சிறப்பாக வீசினர்.

கட்டம் - 1: துருப்புசீட்டு பிளங்கட்

2015 உலகக்கோப்பைத் தொடரில் முதலில் பேட்டிங் செய்து தோல்வி அடைந்திருந்தது நியூசிலாந்து அணி. 2011, 2015 உலகக் கோப்பைத் தொடரில் சேஸிங் செய்த அணியே வென்றிருந்தது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு நல்லதொரு தொடக்கம் தேவைப்பட்டது.
ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய நான்காவது ஓவரில் 12 ரன்கள் குவித்தது
கப்டில் - நிக்கோல்ஸ் இணை.
கப்டில் சற்று நிலைப்பதற்குள் வோக்ஸ் அவரை வீழ்த்தினார்.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைMIKE HEWITT
அதன்பின்னர் கேன் வில்லியம்சன் - நிக்கோல்ஸ் இணை சேர்ந்து பொறுமையாக ரன்கள் சேர்த்தனர். மெல்ல மெல்ல ரன் ரேட்டை உயர்த்தினர். ஸ்கோர் 103 ரன்களை எட்டியபோது பிளங்கட் வீசிய பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் வில்லியம்சன்.
பிளங்கட் வீசிய பந்து பேட்டில் மெலிதாக உரசிச் செல்ல மோர்கன் ரிவ்யூவில் வென்றார்.
வில்லியம்சனுக்கு பிறகு ஹென்றியையும் வீழ்த்தினார் பிளங்கட்.
இங்கிலாந்து v நியூசிலாந்துபடத்தின் காப்புரிமைGLYN KIRK
நடுவரிசையில் நீஷம் சற்று அதிரடியாக ஆடத் துவங்க, அவரையும் தன் பந்துவீச்சில் சாய்த்தார்.
இப்போட்டியில் பிளங்கட் வீழ்த்திய மூவருமே நியூசிலாந்து அணிக்கு பேட்டிங்கில் துருப்புச் சீட்டாக இருந்தவர்கள்.
கடைசி 10 ஓவர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனி ஆவர்த்தனம் நடத்தினார். அவரது பந்துகளை நியூசிலாந்து வீரர்கள் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் கடைசியாக வீசிய ஐந்து ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
241 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணியால் எடுக்க முடிந்தது.
மோர்கன் படை நியூசிலாந்து பேட்டிங்கை எந்தவொரு கட்டத்திலும் தனது பிடியை தளரவிடவில்லை.

இங்கிலாந்து வெற்றிக்கு காரணம் என்ன?

நியூசிலாந்து அணிக்கு பேட்டிங்கில் நடுவரிசை பலவீனமாக இருந்தது. இன்னும் 10 - 20 ரன்களைச் சேர்த்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்ககூடும் என்பதை கேன் வில்லியம்சன் ஒப்புக்கொண்டார்.
போல்ட் கேட்ச் பிடித்தும் பௌண்டரி எல்லையை தொட்டுவிட்டது, ஃபீல்டிங்கில் ஏற்பட்ட சிறு சறுக்கல் காரணமாக இங்கிலாந்துக்கு கிடைத்த நான்கு ரன்கள் ரன்கள் என சிறு சிறு சறுக்கல்கள் இங்கிலாந்து அணிக்கு சாதகமாயின.
நியூசிலாந்துக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவை வீணடிக்கப்பட்டன.