கடந்த அரசாங்கங்களால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக சரித்திரமே இல்லை




(க.கிஷாந்தன்)
இந்த நாட்டின் வரலாற்றில் கடந்த காலங்களில் இருந்த எல்லா அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக சரித்திரம் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் 20.08.2019 அன்று காலை சிவன் ஆலயத்தில் வைத்து டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் சிவலிங்க சிலை வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சர் இராதாகிருஷ்ணன், உலக சைவ திருச்சபையின் தலைவரும், கனடா பெரிய சிவன் ஆலயத்தின் ஸ்தாபகருமான அடியார் விபுலானந்தா மற்றும் பாடசாலை அதிபர் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் கலந்து கொண்ட பின் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டின் வரலாற்றில் கடந்த 70 வருட காலமாக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான உறுதியான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை.
ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நினைத்து வாக்களிப்பதை விட இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் வர வேண்டும் என நினைத்து தான் வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதில் ஓரளவு தமிழ் மக்களை நிம்மதியாக வாழ வைக்க கூடிய ஒரு அரசாங்கத்தை நாம் தெரிவு செய்ய வேண்டும். அதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் வருகையை வைத்து தான் தெரிவு செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும்.
நாம் அதிகளவில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் காரணமாக தான் விமர்சனங்கள் வருகின்றன. அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தால் எந்த விமரசனங்களும் வராது. விமர்சனங்களை நாம் எப்போதும் வரவேற்கின்றோம் என்றார்.