ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா?

மத போதகர் ஜாகிர் நாயக்கிடம் மலேசிய போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் அவர் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்கு அங்குள்ள இரு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாநிலத்தில் அவர் நுழையவே தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவால் தேடப்படும் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தரக் குடியுரிமை அளித்துள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் மலேசியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மலேசிய இந்துக்கள் அந்நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவாக இருப்பதாக ஜாகிர் நாயக் கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் புதிய விருந்தாளியான தாம், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என சில தரப்பினர் விரும்புகிறார்கள் எனில், தமக்கு முன்பே அந்நாட்டுக்கு விருந்தினராக வந்த சீனர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார் ஜாகிர் நாயக்.
இதனால் அவருக்கான எதிர்ப்பு மேலும் வலுப்பட்டுள்ளது. ஜாகிரை நாடு கடத்த வேண்டும் என மலேசிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நான்கு இந்திய அமைச்சர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

பல மணி நேரம் நீடித்த விசாரணை

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜாகிர் நாயக்கிடம் மலேசிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை, இரவு 7 மணி வரை நீடித்தது.
இதன் பின்னர் அவர் வேண்டுகோளை ஏற்று திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக மலேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவு இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

இரு மாநிலங்களில் உரையாற்றவும் ஒரு மாநிலத்தில் நுழைவதற்கும் தடை

இதற்கிடையே ஜாகிர் நாயக் பொது நிகழ்ச்சிகளில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதையடுத்து அவர் எந்த நிகழ்ச்சியிலும் உரையாற்றக் கூடாது என பெர்லிஸ், கெடா ஆகிய இரு மாநிலங்கள் தடை விதித்துள்ளன.
ஜாகிர் நாயக்: இரு மாநிலங்களில் உரையாற்றவும், ஒரு மாநிலத்தில் நுழையவும் தடைபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY
மேலும் சரவாக் மாநிலம் ஒருபடி மேலே சென்று, ஜாகிர் நாயக் அம்மாநிலத்தில் நுழைவதற்கே தடை விதித்துள்ளது.
"ஜாகிர் நாயக் எங்கள் மாநிலத்துக்கு வந்து செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது," என கெடா மாநிலத்தின் மதப் பிரிவுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் இஸ்மாயில் சாலே கூறியதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய மக்கள் மத்தியில் நிலவும் அமைதியும் நல்லிணக்கணமும் நீடிப்பதே முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதன் மூலம் தீயை இன்னும் பெரிதாக்கி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா, ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக மலேசிய அமைச்சரவை ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார்.
வாக்குவாதம் செய்வதற்கு முன்பு இந்த விவகாரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். ஜாகிர் மலேசிய குடிமகன் இல்லை என்பதால் இந்த விவகாரம் குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா மேலும் தெரிவித்தார்.

ஜாகிரை வெளியேற்ற இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு

இந்நிலையில் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்றக் கூடாது என இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அரசு சாரா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜாகிருக்கு எதிராக செயல்படும் சிறுபான்மைக் குழுவினரின் தூண்டுதலுக்கு மலேசிய அரசு அடிபணிய வேண்டாம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன், பினாங்கு மாநில துணை முதல்வர் பி.ராமசாமி, கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.சதீஸ் மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை ஏற்க இயலாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட ஐவரின் கருத்துக்களால் நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே ஐவரையும் தேசத்துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மேலும் வலியுறுத்தி உள்ளது.

கெடு விதித்த ஜாகிர் நாயக்

இதற்கிடையே, ஜாகிர் நாயக் சட்ட ரீதியிலான போராட்டத்தைத் துவங்கி உள்ளார். தன்னைப் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்துள்ள மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜாகிரை வெளியேற்ற இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்புபடத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN
இது தொடர்பாக அமைச்சர் குலசேகரனுக்கு ஜாகிர் தரப்பு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலேசிய இந்தியர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜாகிர் நாயக்கை கண்டித்துள்ள குலசேகரன், இஸ்லாமிய மதத்தை ஜாகிர் தமது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார் என்றும், அவர் நேர்மையற்ற நபர் என்றும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் குலசேகரன் 48 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜாகிர் நாயக் தரப்பு வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றை ஜாகிர் நாயக்கின் வழக்கறிஞர், அமைச்சரின் அலுவலகத்தில் ஒப்படைத்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் விசாரணை, சட்டப் போராட்டம், பரஸ்பர குற்றச்சாட்டுகள் என ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரம் அடுத்தக்கட்ட பரபரப்பை எட்டிப் பிடித்துள்ளது.


--- Advertisment ---