மலேசிய பிரதமர் மஹ்தீர் ஐ.நா.வில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து,காட்டம்


பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும் என மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹமத் வலியுறுத்தி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆக்கிரமிப்பின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றாலும், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என்று மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எனவே அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இல்லையெனில் ஐநாவின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது என்பது சட்ட நீதியைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது என்றார்.
அண்மையில் மகாதீரும், பிரதமர் மோதியும் ரஷ்யாவில் சந்தித்துப் பேசினர். அச்சமயம் மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என பிரதமர் மோதி கோரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்திய வெளியுறவு அமைச்சரும் அதை உறுதி செய்தார். ஆனால் ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து பிரதமர் மோதி தம்மிடம் எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றார் பிரதமர் மகாதீர்.
மேலும் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய நடவடிக்கைகள் குறித்து மட்டுமே பிரதமர் மகாதீரிடம் மிக விரிவாக பிரதமர் மோதி எடுத்துரைத்தார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமையன்று ஐநா தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், காஷ்மீர் விவகாரம் குறித்து ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின் போது பிரதமர் மோதியை சந்தித்துப் பேசியதாகவும், அச்சமயம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோதி தம்மிடம் விரிவாக எடுத்துரைத்ததாகவும் மீண்டும் குறிப்பிட்டார்.

''காஷ்மீர் மீது படையெடுக்காமல், ஏன் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இருக்கக்கூடாது?''

மேலும், பங்களாதேஷ் உள்ளிட்ட சில தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கண்டிருப்பதாக பிரதமர் மோதி தம்மிடம் குறிப்பிட்டதாக மகாதீர் சுட்டிக் காட்டினார்.
''பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதிலும் களைவதிலும் இந்தியாவுக்கு முன் அனுபவம் உள்ள பட்சத்தில், காஷ்மீர் மீது படையெடுக்காமல், ஏன் பேச்சுவார்த்தையை பயன்படுத்தி இருக்கக்கூடாது? என்று தாம் இந்திய தரப்பிடம் கேட்டதாக பிரதமர் மகாதீர் குறிப்பிட்டார்.
காஷ்மீர்படத்தின் காப்புரிமைTAUSEEF MUSTAFA
எனினும் இது தொடர்பாக பிரதமர் மோதி தம்மிடம் எந்தவித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை என்றார் மகாதீர்.
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம், தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என பிரதமர் மோதி ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

''இஸ்‌ரேல் செயல்பாட்டை மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது''

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பேரவையில் மலேசியப் பிரதமர் மகாதீர் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும் இஸ்‌ரேல் - பாலத்தீன விவகாரம் குறித்தும் தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.
பாலத்தீன மண்ணை சட்டவிரோதமாகக் கைப்பற்ற இஸ்‌ரேல் முயற்சிப்பதாகவும், இத்தகைய செயலை மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் அனைத்து இடங்களிலும் ஒடுக்கப்படுவதாகவும், தங்களுக்குரிய பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், முஸ்லிம்களுக்கு புகலிடம் மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய அரசு திடீரென கருத்து தெரிவித்திருப்பது மலேசிய, இந்திய உறவில் புது சங்கடங்களை ஏற்படுத்துமா என்பது குறித்து சிலரிடம் பிபிசி தமிழ் கருத்து கேட்டது.

''இந்தியா, பாகிஸ்தான் சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது''

இந்தியா, பாகிஸ்தான் சார்ந்த விஷயங்களில் மலேசியா தலையிடாமல் இருப்பதே நல்லது என்கிறார் மலேசிய முன்னாள் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை.
முன்னாள் வெளியுறவு துணை அமைச்சர் கோகிலன் பிள்ளைபடத்தின் காப்புரிமைKOHOLAN PILLAI
Image captionகோகிலன் பிள்ளை.
''இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மலேசியப் பிரதமர் ஐநா பேரவையில் காஷ்மீர் விவகாரத்தை தொட்டுப் பேசியிருக்க வேண்டாம் எனக் கருதுகிறேன்.
''இரு தரப்பு நல்லுறவு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது நல்லது".
''இதற்கு முன்பு பிற நாடுகளின் விவகாரங்களில் மலேசியா தலையிட்டதில்லை. எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் சார்ந்த விஷயங்களில் மலேசியா தலையிடாமல் இருப்பதே நல்லது என்றும் நினைக்கிறேன்.
ஜாகிர் நாயக் விவகாரத்தில் கூட, அவரை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடும் பட்சத்தில் அதை செய்துவிட்டுப் போகலாம். இது தொடர்பான முடிவை எடுத்துச் செயல்படுவது நல்லது.
என்னைப் பொறுத்தவரை மலேசியப் பிரதமர் காஷ்மீர் விவகாரம் குறித்து இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்க வேண்டாம் என்று கருதுகிறேன்,'' என்கிறார் டத்தோ கோகிலன் பிள்ளை.

’குற்றம் காண்பதற்கு ஏதுமில்லை’

இதற்கிடையே காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ள கருத்தில் குற்றம் காண்பதற்கு ஏதுமில்லை என்கிறார் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி.
RAMASAMYபடத்தின் காப்புரிமைRAMASAMY/FACEBOOK
''காஷ்மீர் விவகாரத்தில் ஐநாவின் உதவியுடன் தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். இதில் குற்றம் காண்பதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியில் பார்த்தோமானால், பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையில், அதை ஆதரித்து மகாதீர் தன் கருத்தை தெரிவித்திருக்கலாம்.
''காஷ்மீர் விவகாரத்தில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் கோரிக்கை. அதன் மூலம் காஷ்மீர் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தான் என இரு நாடுகளில் யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நல்ல வாய்ப்பாக அமையும் என்பதும் பாகிஸ்தான் வலியுறுத்தும் கருத்து.
''இத்தகைய சூழ்நிலையில், இஸ்லாமிய நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என பிரதமர் மகாதீர் விரும்புகிறார். அவற்றில் பாகிஸ்தானும் ஒன்று. தற்போதைய சூழ்நிலையில் காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கை முற்றிலும் தவறு என்று மகாதீர் கூறியதாகத் தெரியவில்லை.
''அதனால்தான் அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை அணுகும்போது இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், மகாதீர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிடுகிறேன்.
''ஐநா இதுவரை எந்த நாட்டின் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறது? அதையும் நாம் கவனிக்க வேண்டும். மகாதீர் தெரிவித்த கருத்து இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை.
''தற்போது மத போதகர் ஜாகிர் நாயக் விவகாரத்தை தவிர்த்துவிட்டுப் பார்க்கும் போது இந்தியா, மலேசியா இடையே நல்லுறவு நீடிப்பதாகவே கருதுகிறேன். இரு நாடுகளுக்கிடையே ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் சீராகவே நடந்து வருகின்றன.
''எனவே காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மகாதீர் கூறிய கருத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லைு. காஷ்மீர் விவகாரம் என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அது குறித்து பிரதமர் மகாதீர் உள்நோக்கத்துடன் கருத்து கூறியதாக கருதத் தேவையில்லை.
''காஷ்மீர் என்பது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி. இந்நிலையில் அங்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை சரியானது என்று தம்மால் சொல்ல இயலாது என்பதால் ஐநா மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். எனவேதான் அரசியல் ரீதியில் இன்னொரு இஸ்லாமிய நாட்டிற்கு அவர் ஆதரவு அளித்திருப்பதாகக் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார் பினாங்கு ராமசாமி.

டத்தோ விக்னேஸ்வரன்: குற்றம் நடந்திருந்தால் மஇகா கண்டித்திருக்கும்

''காஷ்மீரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனரா, அல்லது இலங்கையில் நிகழ்ந்தது போல் காஷ்மீரிலும் ஏதேனும் நிகழ்ந்ததா? என்று பார்க்க வேண்டும்,'' என்கிறார் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா.) கட்சித் தலைவர் டத்தோ விக்னேஸ்வரன்.
விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமைPARLIMENT MALAYSIA
''அவ்வாறு ஏதேனும் நடந்திருந்தால், கருத்து சொல்வது மனிதாபிமான அடிப்படையில் சரியாக இருந்திருக்கும். ஆனால் அப்படியொரு சூழ்நிலை இல்லாத பட்சத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவைச் செயல்படுத்துவது இந்தியாவின் தனிப்பட்ட விருப்பம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் ஐநாவும் இணைந்து நல்லதொரு தீர்வைக் கொண்டு வருவார்கள் என நான் கருதுகிறேன்,'' என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
''இத்தகைய சூழ்நிலையில் ஜாகிர் நாயக் விவகாரம் தொடர்பாக இந்தியா, மலேசியா இடையேயான உறவில் பிரச்சனை ஏற்படுமா என்று சிலர் கேட்கக்கூடும். மலேசியாவில் பல்வேறு இனத்தவரும் இந்நாடு சுதந்திரம் பெற்றது முதல் இணக்கமாகவே வாழ்ந்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் கூட இல்லாத அளவிற்கு மலேசியாவில் மிகப் பெரிய முருகன் சிலை உள்ளது. ஜாகிர் நாயக் போல பலர் இங்கு வந்து போகலாம். விஞ்ஞானிகளைப் போல் பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறிச் செல்லலாம். மற்ற மதங்களை விட தங்கள் மதம் தான் சிறந்தது என்று அவர்கள் கூறுவது இயல்பு.
மலேசியாவில் இருக்கும் வரை, இந்நாட்டின் அமைதியை அவர்கள் கெடுக்காத வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அவர்கள் செய்ய வந்த பணியை, தங்கள் மதத்தை வளர்க்கும் பணியைச் செய்துவிட்டுப் போகட்டும். பிற மதங்களை சிறுமைப்படுத்தக் கூடாது. இதைத் தான் நாங்கள் அரசாங்கத்திடமும் வலியுறுத்தி உள்ளோம்".
''மற்றபடி காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது எனில், அதனால் விளையக் கூடிய எதையும் அரசுத் தரப்பு தான் எதிர்கொள்ள வேண்டும், அத்தரப்பால்தான் எதிர்கொள்ளவும் முடியும்.
காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயம். அங்கு பலர் கொல்லப்பட்டிருந்தால், மனிதாபிமான அடிப்படையில் ம.இ.கா.வும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கும்.
இந்த விவகாரம் குறித்து இந்தியா நிச்சயம் நல்லதொரு முடிவெடுக்கும். காஷ்மீரில் வாழ்பவர்களுக்குத்தான் அங்குள்ள நிலைமை குறித்து தெரியும். இந்நிலையில் பிரதமர் மகாதீர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதையடுத்து வரக்கூடிய எதிர்வினை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை மலேசிய அரசும், அதில் அங்கம் வகிக்கக் கூடிய இந்திய சமுதாயப் பிரதிநிதிகளும்தான் எதிர்கொள்ள வேண்டும்".
''ம.இ.கா.வை பொறுத்தவரை காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள், படுகொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்குமாயின் அதை நிச்சயம் கண்டிப்போம்,'' என்கிறார் மலேசிய இந்திய காங்கிரஸ் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன்.

''துன் மகாதீர் தேவையற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கருத வேண்டியுள்ளது''

''துன் மகாதீர் தேவையற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கருத வேண்டியுள்ளது'' என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.
படத்தின் காப்புரிமைMUTHARASAN
''ஐநா பேரவையில் உரையாற்றிய போது இஸ்‌ரேல் - பாலத்தீன விவகாரம், ரோஹிஞ்சா பிரச்சனை, காஷ்மீர் விவகாரம் என மூன்று முக்கியமான விஷயங்களை மலேசியப் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்‌ரேல் விவகாரம் என்பது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சனை. அதில் மலேசியா முன்பே ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதை இவ்வளவு காலமும் உறுதியாகக் கடைபிடித்தும் வருகிறது. எனவே அது குறித்து ஐநாவில் பேசுவதில் எந்தவிதத் தவறும் இல்லை.
ரோகிஞ்சா விவகாரமும் அனைத்துலக பிரச்சனை தான். அங்கு குடியுரிமை பெற்ற மக்கள் தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை உள்ளது. எனவே இது அனைத்துலகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு ரோகிஞ்சா மக்கள் அஞ்சுகின்றனர். எனவே அந்த மக்களின் துயர் குறித்து ஐநா பேரவையில் பேசுவதில் தவறில்லை.
ஆனால் காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசியப் பிரதமர் பேசியிருக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் காஷ்மீர் என்பது சுதந்திரம் பெற்ற இந்தியாவின் ஓர் அங்கம்... ஒரு மாநிலம்" என்று தெரிவித்துள்ளார் முத்தரசன்.
''காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசுகிறோம் எனில், மறுபக்கம் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும் பேச வேண்டியிருக்கும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அது சரியானது, சரியல்ல என்று கருத்து சொல்வது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது போன்றதாகும்.
''மலேசியாவில் பூமி புத்திரர்களுக்கு முப்பது விழுக்காடு ஒதுக்கீடு அளிப்பது சரியல்ல என்று இந்தியா கருத்து தெரிவித்தால், அதை மலேசியாவால் ஏற்க முடியுமா? இது உள்நாட்டு விஷயம் என்றுதானே சொல்வோம்? அதே போலத்தான் காஷ்மீர் விவகாரம் என்பது தங்களின் உள் விவகாரம் என்றே இந்தியா கூறுகிறது.
அதை ஒரு குறையாக மலேசியா எடுத்துரைப்பது தேவையற்ற நடவடிக்கை என்பேன். அதிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவது இன்னும் சற்று அதிகப்படியான, தீவிர அணுகுமுறை என்று தோன்றுகிறது.
ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியல்ல என்று குறிப்பிடுவது போல் ஆகிவிடுகிறது. ஆக்கிரமிப்பு என்றால் வேறொரு நாட்டின் பகுதிக்குள் நுழைந்து உட்கார்ந்து கொள்வது என்பது போன்றது.
படத்தின் காப்புரிமைREUTERS
''ஆனால் 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது, அதனுடன் இணைந்த ஒரு மாநிலம் தான் காஷ்மீர். இதுவே உண்மை நிலை. அடுத்து இந்தியா காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்றும் பிரதமர் மகாதீர் வலியுறுத்தி உள்ளார். இதுவும் தேவையற்ற ஒரு கருத்து.
''காஷ்மீரில் பாகிஸ்தான் தரப்புதான் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் இந்தியா சாடுகிறது. ஆனால் அந்த பாகிஸ்தானிடமே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார் மலேசியப் பிரதமர்.
''ஐநா பேரவையில் துன் மகாதீர் உரையாற்றிய பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், அதற்கு அமெரிக்கா நிதியுதவி அளித்தது என்றும் வெளிப்படையாக அவர் கூறியுள்ளார். மேலும் ஐநாவால் அனைத்துலக பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 130 பேர் பாகிஸ்தானில் இருப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
அது மட்டுமல்ல, பயங்கரவாதிகள் சிலருக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் அளிப்பதாகக் கூட ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் இந்தியா எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்க முடியும்? எனவே அந்நிய கொள்கையில் பிரதமர் துன் மகாதீர் தேவையற்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவோ, அல்லது கருத்து தெரிவித்திருப்பதாகவோ சொல்லத் தோன்றுகிறது.
''இஸ்‌ரேல் - பாலத்தீன விவகாரத்திலும், ரோஹிஞ்சா பிரச்சனையிலும் ஏராளமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருதரப்பு மக்கள் பல்வேறு விதங்களிலும் கொல்லப்படுகின்றனர். எனவே இவ்விரு பிரச்சனைகளும் அனைத்துலக கவனத்தை ஈர்த்துள்ளன.
''ஆனால் காஷ்மீரில் இத்தகைய நிலை இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள காஷ்மீரில் யாரும் அகதிகளாக்கப்படவில்லை. தங்கள் பகுதியை விட்டு உயிருக்குப் பயந்து யாரும் பாகிஸ்தானிடம் அல்லது மற்ற நாடுகளில் தஞ்சம் அடையவில்லை. அனைத்துமே அந்த மண்ணில் மட்டுமே நடந்தேறுகிறது.
''காஷ்மீரில் ஊடுருவும் தீவிரவாதிகளை மட்டுமே சுட்டுக் கொல்வதாக இந்திய அரசு தெரிவிக்கிறது. எனவேதான் இது தங்களது உள்நாட்டுப் பிரச்சனை என்றும் இந்தியா சொல்கிறது,'' என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.