நோபல் பரிசு 2019: பௌதிகவியல்


#Suhaib.
2019 ஆண்டுக்கான பௌதிகவியலுக்கான நோபல் பரிசு "பிரபஞ்சத்தின் பரிணாமத்தையும் அண்டத்தில் புவியின் நிலையையும் புரிந்துகொள்வதற்கான அறிவியல் பங்களிப்புக்காக" வழங்கப்படுகிறது. பரிசின் ஒரு பாதியானது "பௌதிக அண்டவியல் தொடர்பான கோட்பாட்டு ஆய்வுகளில்" ஈடுபட்ட James Peebles க்கு வழங்கப்பட்டதோடு மறு பாதியானது "சூரியனை ஒத்த ஒரு உடுவை சுற்றி வரும் ஒரு புறக்கோளை கண்டறிந்தமைக்காக" Michel Mayor மற்றும் Didier Queloz ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

• 1960 களின் நடுப்பகுதியில் இருந்து அண்டவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் James Peebles இன் கோட்பாடு சட்டகமானது பெருவெடிப்பு நிகழ்ந்தது முதல் எமது பிரபஞ்சத்தின் பரிணாமத்தை விளக்குகிறது. இவரது கண்டுபிடிப்புகள் பிரபஞ்சத்தின் சூழல் தொடர்பான ஆழமான ஆய்வுகளுக்கு வித்துட்டுள்ளது. இப்பிரபஞ்சம் பெருவெடிப்பின் மூலம் தோன்றியது முதல், விரிவடைந்து இன்றைய நிலையை அடைந்துது வரையிலான விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுவது விண்வெளி நுண்ணலை பின்னணி கதிர்வீச்சு (Cosmic Microwave Background Radiation). இது 1965ல் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றவர்களோடு இணைந்து, பிரபஞ்சத்தை இணைக்கும் இந்த கதிர்வீச்சு இருப்பதை கணித்தவர் பீபிள்ஸ்.

பிரபஞ்சத்தின் மொத்த திணிவு, சக்தியில் வெறும் 5% ஆனதே எம்மால் அறியப்பட்ட சடப்பொருட்களில் உள்ளடங்கியேள்ளதோடு மிகுதி 95% ஆனது இதுவரை அறியப்படாத அதிசயமாகவே திகழ்கிறது என்பதை இவரது ஆய்வுகள் உறுதிப்படுத்தின. பேரண்டத்தில் 95 சதவீதம் நிரம்பியுள்ள இந்த இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருள் (Dark Energy and Dark Matter) குறித்த ஆய்வுக்கும் பீபிள்ஸ் முக்கியப் பங்களிப்புகள் செய்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளார்.

• ஜெனீவா பல்கலைக்கழக பேராசிரியர்களான Michel Mayor மற்றும் Didier Queloz ஆகியோர் 1995 இல் சூரிய மண்டலத்தின் அப்பால் புதிய  புறக்கோள் ஒன்றைக் கண்டறிந்தனர். 50 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றிவரும் 51 PEGASI B என்ற ஒரு வாயுக் கோள் ஒன்றினைக் கண்டுபிடித்ததற்காகவே இவ்விருவரும் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சூரியனைப் போன்றதொரு நட்சத்திரத்தை சுற்றிவரும் கோள் ஒன்றினை சூரியக் குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடித்தது இதுவே முதல் முறையாகும்.