#AlexeiLeonov விண்ணில் நடந்த முதல் வீரர் மறைந்தார்


அலெக்ஸி லியோனோவ், சோவியத் ரஷ்யாவின் விண்வெளி வீரர். விண்வெளியில் 12 நிமிடங்கள் நடந்ததன் மூலம் சாதனை படைத்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர், 54 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சாதனையைச் செய்தார். தற்போது 85 வயது ஆகும்நிலையில், இயற்கை எய்திவிட்டார்.
அலெக்ஸி லியோனோவ்
இந்தத் தகவலை ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் 'ரோஸ்கோஸ்மோஸ்', தனது இணையதளத்தில் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக லியோனவ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுவந்தார் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி, விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளித் துறையில் தீவிரமான பற்றுக்கொண்டவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடின், லியோனோவ் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதில் 'லியோனோவ் உண்மையான முன்னோடி, ஒரு வலிமையான, வீரமான நபர்' என்று அவர் கூறியிருக்கிறார். லியோனோவ் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே இரண்டு அமெரிக்கர்களின் விண்வெளிப் பயணத்தை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த நாசா, அதை நிறுத்தியது.
'லியோனோவ் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்'.
அறிவியல் புனைவு எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க்.
லியோனோவ் பற்றி எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க் பேசுகையில்,``மார்ச் 18, 1965 ஐ சாதாரணமாகக் கடக்க முடியாத நாள், முதல் விண்வெளி வீரர் ஆகாயத்தில் நடந்த நாள், 12 நிமிடம் 9 நொடி விண்வெளியில் இருந்தார். இது, விண்வெளி வீரர்களின் மிகப்பெரிய கனவு. லியோனோவ், தனது வோஸ்கோட் 2 விண்வெளி காப்ஸ்யூலிலிருந்து வெளியேறியபோது, ​'நான் அந்த வெற்றிடத்திற்குள் நுழைந்தேன். ஆனால் விழவில்லை. அது வித்தியாசமான அனுபவம்' எனப் பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவுகூர்ந்த அவர், ``நட்சத்திரங்களால் மயக்கமடைந்தேன். அவை எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. எனக்கு மேலே கீழே கண்டதெல்லாம் நட்சத்திரங்கள். கனவுபோல இருந்தது. அப்போதிருந்த சுவாசத்தையும் இதயத் துடிப்பையும் என்னால் இன்னும் கேட்க முடிகிறது'' என்றார்.