இன்றைய நிலையில்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி




இலங்கையின் மிக பழமை வாய்ந்த பிரதான கட்சியாக திகழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று இரண்டாக பிளவுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கும் அதேவேளை, மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதான பதவிகளிலுள்ளவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையில், அந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறங்காத பின்னணியில், அந்த கட்சியின் உயர்மட்டம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முன்னர் தீர்மானித்திருந்தது.
எனினும், கட்சியின் ஆலோசகரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பலர் அந்த தீர்மானத்திற்கு எதிராக குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க போவதில்லை எனவும், தான் நடுநிலையாக செயற்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததுடன், கட்சியின் தலைமை பொறுப்பிற்கு பதில் தலைவராக ரோஹண லக்ஷ்மன் பியதாஸவை நியமித்திருந்தார்.


கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்தமையானது முற்றிலும் தவறான விடயம் எனவும், கட்சியிலுள்ள பலர் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு எனவும் கூறி, மற்றுமொரு குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்புக்கும் குழுவொன்றை ஸ்தாபித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பு குழு என்ற அமைப்பின் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்படுவதுடன், அந்த குழுவின் மாநாடு கொழும்பில் நேற்றைய தினம் நடத்தப்பட்டது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்கள் உறுப்பினர்களும் பங்குப்பற்றியிருந்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
''தாமரை மொட்டு கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு எமது கட்சி சட்ட ரீதியாக முறையான அனுமதியை பெற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் ஆலோசகரான எனக்கு இதுவரை அந்த தீர்மானம் குறித்து அறிவிக்கப்படவில்லை. மேலும் பல பிரதான பதவிகளை வகித்தவர்களுக்கும் இந்த தீர்மானம் அறிவிக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஷ இரண்டு மூன்று தடவை கட்சியை இல்லாதொழிக்க முயற்சித்தார். எனினும், கட்சியை நாமே காப்பாற்றினோம்," என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுசிங்க கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் குழுவின் மாநாடு நேற்று மாலை நடைபெற்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு கொழும்பில் கூடியது.

இலங்கையின் மிக பழைமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் குழுவின் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்களை உடனடியாக பதவியிலிருந்து விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அணியை வலி நடத்திய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து எந்தவித தீர்மானமும் இதுவரை எட்டப்படவில்லை என அந்த கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் குழு எவ்வாறு உருவாகியது?

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் இந்த கட்சி 1951ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கையின் மிக பழைமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்

1956ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி மாபெரும் வெற்றியை பெற்றுக் கொண்டது.
1959ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அதன்பின்னர் கட்சிக்குள் பாரிய பிரச்சனைகள் எழுந்த நிலையில், புதிய பிரதமராக விஜயானந்த தஹநாயக்க நியமிக்கப்பட்டார்.
எனினும்,கட்சிக்குள் சிக்கல் நிலைமை தொடர்ந்த பின்னணியில் 1960ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதன்படி, 1960ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், 1977ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் தோல்வி அடைந்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை பிடித்தது.
மீண்டும் 1994ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியை பிடித்தது.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க தம்பதிகளின் புதல்வியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றியீட்டினார்.
அதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வசமாகியது.
இந்த நிலையில், 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் பண்டாரநாயக்கவின் குடும்பத்திடமிருந்து ராஜபக்ஷ குடும்பம் வசமாகியது.
இதன்படி, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவி வகித்தார்.
எனினும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டிய நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
இதன்படி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்க கட்சி தீர்மானித்தது.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகராக பெயரளவில் மாத்திரம் செயற்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி அதனை வலுப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்ட நாள் முதல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
இந்த நிலையில், வரலாற்றில் முதல் தடவையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத முதலாவது சந்தர்ப்பமாக இந்த முறை பதிவாகியது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன இந்த முறை எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்கவில்லை.