நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும்?

அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 15வது பிரிவுகளை மீறுவதாக குடியுரிமை (திருத்த) சட்ட மசோதா 2019 உள்ளது என்றும் அந்த அடிப்படையில், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும்?

இந்திய அரசியல்சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும்.

இப்போது இந்திய குடியுரிமை அளிப்பதற்கு பரிசீலனைக்கு உரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களும் அடங்குவர். இந்த நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்துள்ள முஸ்லிம்களுக்கும் 14வது பிரிவின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு தனியாக ஒரு சட்டம் அமல் செய்யப்பட வேண்டும் என பிரிவு 14ல் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், இப்போது நாட்டை ஆண்டு வரும் கட்சி, ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே மொழி என்று பேசி வருகிறது.

இருந்தபோதிலும், இப்போது மக்களை நாம் வகைப்படுத்தத் தொடங்கி இருக்கிறோம் - இதில் சிலரை நாம் சேர்த்துவிட்டு, சிலரை நீக்கியிருக்கிறோம். உதாரணமாக இஸ்லாம் மற்றும் ஜுடாயிசம் மதத்தவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது அடிப்படை மாண்புகளுக்கு எதிரானதாக உள்ளது.

உதாரணமாக, தெலங்கானா மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் நல்சார் பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினால், மற்றவர்கள் நீக்கப்படுவதாக அர்த்தம். அதாவது, வசிப்பிடத்தின் அடிப்படையில் நீங்கள் இடஒதுக்கீடு அளிக்கிறீர்கள். நீதிமன்றங்கள் இதை ஏற்றுக் கொள்கின்றன.

மக்களுக்கு ஒரே மாதிரி சட்டம் இருக்க வேண்டும் என்பதை 14வது பிரிவு கட்டாயமாக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக, நாட்டில் வெவ்வேறு பிரிவு மக்களுக்கும், வெவ்வேறு மாதிரி சட்டங்களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நேர்மையாகவும், நியாயமான முறையிலும் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவுகள் உருவாக்கப்பட்டால், அது மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. அது நவீனகால குடியுரிமை மற்றும் தேசிய அடையாளத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது. இந்த மக்களை ஏற்றுக் கொள்ள எந்த நாடும் விரும்புமா என்பது பற்றியும் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியா இந்தச் சட்டத்தை உருவாக்கினால், எந்த நாடும் கேலி பேசாத வகையில் அது அமைய வேண்டும்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மதத்தின் அடிப்படையில் நடைபெறும் வகைப்படுத்தல் மற்றும் பாகுபாடான எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானவை என்று நமது அரசியல்சாசனம் கூறுகிறது.

'அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முடியாது'

முஸ்லிம் மக்கள் தனியான வகைப்படுத்தலின் கீழ் வருவார்கள் என்று அரசு கூறுமானால், பொது சிவில் சட்டத்தை அது கொண்டு வர முடியாது. ஏனெனில், நாங்கள் தனி பிரிவினர் என்றால் எங்களுக்கென தனி சட்டம் இருக்க வேண்டும் என்று முஸ்லிம்கள் கூற முடியும்.

குடியுரிமைக்கு தனியாக ஒரு சட்டம் இருக்குமானால், எங்களுக்கென தனிப்பட்ட தனிநபர் சட்டமும் இருக்க வேண்டும். இந்த வகையில், சட்டத்தில் மாறுதல்கள் செய்ய அல்லது மேம்படுத்த உங்களால் ஒருபோதும முடியாமல் போகலாம். இந்த மசோதா மிகவும் ஆபத்தானது என்று நான் நம்புகிறேன். இன்றைக்கு மதப் பாகுபாடு நியாயப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் சாதியின் அடிப்படையில் வகைப்படுத்தல் மற்றும் பாகுபாடும் நியாயப்படுத்தப்படும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்: பாஜகவின் திட்டம் என்ன?
குடியுரிமை சட்டத் திருத்தம்: இந்திய வம்சாவழி தமிழ் அகதிகளின் நிலை என்ன?
நாட்டை நாம் எந்த திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்! இந்த முறையில் மக்களை வகைப்படுத்துதல் மற்றும் பிரிப்பதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும், அது சட்டபூர்வமானதாகவும் இருக்க வேண்டும். நமது நோக்கம், நியாயப்படுத்தக் கூடியதாக இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

யார் வேண்டுமானாலும் இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் இந்திய அரசியல்சாசனத்தின்படி, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது அரசியல்சாசனத்தின் அங்கமாகிவிடுகிறது. எனவே, எந்த வகையில் இது அரசியல்சாசனத்துக்கு எதிரானது என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வழக்கு தொடர்பவருக்கு உள்ளது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இதுபோன்ற வழக்குகள் அரசியல்சாசன அமர்வுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அமர்வின் முன்பு ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இதில் விரைவில் விசாரணை தொடங்க வாய்ப்பில்லை.

'நீதிமன்றத்தில் எதை நிரூபிக்க வேண்டும்?'

நாட்டில் உள்ள நல்ல சிந்தனையாளர்கள், தவறான திசையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும். அரசியல்சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்ற முடியாது. அரசியல்சாசனத்தின் அமைப்பை, ஒரு சிறிய சட்டத்தால் மாற்ற முடியாது. எனவே, இந்தச் சட்டம் எந்த வகையில் அரசியல்சாசனத்தின் அடிப்படை அமைப்பை மாற்றுவதாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும்.

நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிலைமையில் மாற்றம் வரும். இப்போது, நாட்டு மக்களின் நம்பிக்கை உச்சநீதிமன்றத்தின் மீதுதான் உள்ளது. அரசியல்சாசனத்தின் அடிப்படை அமைப்பு பற்றி உச்சநீதிமன்றம் எப்படி வரையறை செய்யப் போகிறது, அது இந்த மசோதாவுக்கு எப்படி பொருந்தும் என கூறப் போகிறது என்பவை உச்சநீதிமன்றத்திற்கான ஒரு பரிசோதனையாக இருக்கப் போகிறது.

இந்த நாடு மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகே இந்த விஷயத்தை கவனிக்கும். பல சமயங்களில் பெரும்பான்மை பலம் இருக்கும் காரணத்தால், அரசியல்சாசனத்துக்கு முரணான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும். நீதிமன்றங்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ஆய்வுக்கு உட்படுத்தி, அரசியல்சாசனத்தைக் காப்பாற்றும். இந்தியாவின் நீதிமன்றம் இதை எப்படி கையாளப் போகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமே கவனித்துக் கொண்டிருக்கும்.

முஸ்லிம் லீக் வழக்கு
இதனிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் அது கோரியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 21 ஆகியவற்றை மீறுவதாக இந்த சட்டம் அமைந்திருப்பதால் இந்த சட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கவேண்டும் அது கோரியுள்ளது.


Advertisement