பற்றி எரிகிறது அசாம்: துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி

இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அசாமில் கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கி போராடிவருகின்றனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறங்கியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என்பதை பிபிசி ஹிந்தி சேவையிடம் அசாம் டிஜிபி உறுதி செய்துள்ளார். ஆனால் இது போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் நடந்ததா என்று அவர் கூறவில்லை.
போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்தும் தாக்கியதில் போலீசார் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை மதவேறுபாடு பாராமல் வெளியேற்றவேண்டும் என்று அசாம் மக்கள் 6 ஆண்டுகள் போராடியதன் பலனாக, அரசுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையில் 1985-ம் ஆண்டு புகழ்பெற்ற அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு அரசு ஒப்புக்கொண்டது. அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக 2014-ம் ஆண்டுவரை சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம் அல்லாத பிரிவினருக்கு குடியுரிமை தருவதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது.
எனவே, தங்கள் மொழி, இன பண்பாட்டு அடையாளம் முற்றிலும் அழிந்துவிடும், வங்காளிகள் எண்ணிக்கை அசாமில் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவித்து அசாம் மக்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெளஹாத்தி உள்ளிட்ட பல இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்துக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Advertisement