இரானில் பிரிட்டன் தூதர் கைது

பயணிகள் விமானத்தை சுட்டுக் கொன்றதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து, இரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது பிரிட்டன் தூதர் கைதுசெய்யப்பட்டார்.
இரானுக்கான பிரிட்டனின் தூதரான ராப் மெக்காரே மூன்று மணிநேரம் காவல்துறையினரின் பிடியில் வைக்கப்பட்ட சம்பவத்தை "அப்பட்டமான சர்வதேச சட்ட விதி மீறல்" என்று பிரிட்டன் குறிப்பிட்டுள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி சென்ற விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்றில் பிரிட்டனின் தூதர் பங்கேற்றதாகவும், பின்னர் அதே கூட்டம் போராட்டமாக மாறியதாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், போராட்டத்திலிருந்து கிளம்பி பிரிட்டன் தூதரகத்தை நோக்கி சென்ற மெக்காரே வழியில் முடி திருத்தும் செய்யும் கடைக்கு சென்றபோது கைதுசெய்யப்பட்டார்.
இரானில் பிரிட்டனின் தூதர் கைது - அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
"எந்தவொரு காரணமும் விளக்கமும் இல்லாமல் டெஹ்ரானில் உள்ள எங்கள் தூதரை கைது செய்வது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்" என்று பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்கலான நிலையில் உள்ள இரானிய அரசு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக மெக்காரே மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரான் தலைநகர் டெஹ்ரானிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்து மூன்று நாட்களுக்கு பிறகு, நேற்று (சனிக்கிழமை) தாங்கள் "தவறுதலாக" அந்த விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் அறிவித்தது.
இரானில் பிரிட்டனின் தூதர் கைது - அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
உக்ரேனிய பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தவில்லை என்று முதலில் கூறிய இரான் அரசு, பின்பு மற்ற நாடுகளின் குற்றஞ்சாட்டுகளை தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரான் தலைநகர் டெஹ்ரானில் குறைந்தது இரண்டு பல்கலைக்கழகங்களின் முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், இரானிய அரசு அதிகாரிகளை 'பொய்யர்கள்' என்று கூறி முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement