நிந்தவூரரில் பெண் உத்தியோகத்தரை தாக்கியவருக்கு விளக்கமறியல்


பாறுக் ஷிஹான்

அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த பெண் உத்தியோகத்தரை   தாக்கியதாகக் கூறப்படும் அரச உத்தியோகத்தரை இன்று ( 06 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ் ( 34 ) என்பவரை தாக்கிய சம்பவத்தில் 5 நாட்களாக தலைமறைவாகிய நிலையில் அதிகாலை (6) சந்தேகத்தில்  கைதுசெய்யப்பட்ட   அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரியும் ஜ . எல் . ஏ . கார்லிக் என்பவர்   சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

 இதன் போது தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் அதன் விளைவுகளான போராட்டங்கள் இடம்பெறுதல் பொதுச்சொத்துக்கள் சேதமடைதல்  இப்பிரச்சினை காரணமாக இனநல்லுறவு சீர்குலைதல் என பொலிசார் தமது வாதங்களை முன்வைத்து சந்தேக நபரின் பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு மன்றில் வேண்டினர்.

சந்தேக நபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்த போதிலும் நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற வேளை நீதிமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறீல் உட்பட பொது அமைப்பின் பிரதிநிதிகள் பிரசன்னமாகி இருந்தனர்.

சம்பவத்தின் பின்னணி
 

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் நிலைய முகாமைத்துவ உத்தியோகத்தராக பணி புரிந்து வந்த பி.தவப்பிரியா என்பவர் கடந்த முதலாம் திகதி நிலையத்தின் தலைமை கமநல உத்தியோகத்தரினால் கடமை நேரத்தில் தாக்கப்பட்டார்.புதிய வருடத்தின் கடந்த 1 ம் திகதி சத்திய பிரமாணம் நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இச்சம்பவம் இடம்பெற்றதாகவும்  அனைத்து ஊழியர்களுக்கு முன்னிலையில் தனக்கு  கன்னத்தில் குறித்த நபர்  அறைந்துள்ளதாக  அன்றைய தினம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடொன்றை மேற்கொண்ட பின்னர்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 குறித்த பெண் ஊழியர் தாக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பது தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

தற்போது கடந்த 5 நாட்கள் தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

 இதேவேளை , தாக்கிய அரச உத்தியோகத்தரை கைது செய்ய வலியுறுத்தி ,பெண்ணுரிமை அமைப்புகள் இன்று ( 06 ) ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு  அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்டிருந்தன . எனினும் , சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது .ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு  நியாயம் கோரி போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் தவப்பிரியா , மேலதிக சிகிச்சைக்காக , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு , நேற்று ( 05 ) இடமாற்றப்பட்டுள்ளார் .