"இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் முயற்சி"

டெல்லி, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டான இடமாக டெல்லி நிசாமுதீனில் உள்ள 'பங்லேவாலி மஸ்ஜித்' என்று அழைக்கப்படும் நிசாமுதீன் மர்காஸ் மசூதி தெரிவிக்கப்படுகிறது.
இங்கு நடந்த 'தப்லிக்- ஈ - ஜமாஅத்' நிகழ்வில் கலந்துகொண்டு தெலங்கானா திரும்பியவர்களில் ஆறு பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
அந்த நிகழ்வின்போது அங்கு இருந்தவர்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என டெல்லி அரசும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து வந்து அந்த ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது.
இன்று, செவ்வாய்க்கிழமை, தமிழகத்தில் புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்ட 50 பேரில், 45 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்று தமிழக அரசின் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில் சென்னை பல்லாவரத்தில் இருந்து டெல்லி மசூதிக்கு சென்று, அங்கு நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட முஃப்தி முகமது லுக்மான் பிபிசி தமிழிடம் பேசினார்.
"இது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு கிடையாது. ஆண்டுதோறும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு நடக்கும் ஜமாஅத்துக்கு வருவது வழக்கம். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சீர்திருத்த உபதேசம் செய்ய தமிழகத்தில் இருந்து இங்கு வருவது வழக்கம். அப்படித்தான் நாங்களும் இங்கு வந்தோம். 20ஆம் தேதி மாலைதான் எங்கள் நிகழ்ச்சி மசூதியில் தொடங்கியது. ஆனால் ஊரடங்கு வரவுள்ளதையொட்டி 21ஆம் தேதியே விமானம் மற்றும் ரயில் மூலம் யாருக்கெல்லாம் முடிந்ததோ, அவர்கள் தமிழகம் திரும்பி விட்டனர். போக முடியாத எங்களைப்போல் சிலபேர் இங்கேயே தங்கிவிட்டோம்," என பிபிசி தமிழ் செய்தியாளர் விக்னேஷிடம் கூறினார் முஃப்தி முகமது லுக்மா.
"கோயிலுக்கு வழிபட வருவது, வேறு காரணங்களுக்கு வருபவர்கள் என பலரும் தமிழகத்தில் இருந்து டெல்லி வந்திருப்பார்கள். ஆனால் எங்களால்தான் டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பரவியது என்று செய்திகள் வெளியாகியுள்ளது வருத்தமாக உள்ளது. இது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் முயற்சி," என்றார் அவர்.
தெலங்கானாவில் உண்டான மரணங்கள், தமிழகத்தில் சிலருக்கு உண்டாகியுள்ள தொற்று உள்ளிட்டவைக்கு இந்த மசூதி நிகழ்வில் இருந்து பரவியதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளது குறித்த பிபிசி தமிழின் கேள்விக்கு பதிலளித்த அவர், "தெலங்கானா மரணங்கள் குறித்து அந்த மாநிலத்தில் இருந்து வந்தவர்களிடம் கேட்டோம். அவர்களுக்கும் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. தகவல் தெரிந்தபின் அவர்களே ஊடகங்களிடம் சொல்வார்கள். தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் யாரும் குழுவாக வரவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை அவரவர் தனித்தனியாக வந்தவர்கள்," என்றார்.
தமிழகம் திரும்ப தமிழக அரசு அதிகாரிகளின் உதவியைக் கோரியுள்ளதாகவும், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றுக்கு டெல்லி மாநில சுகாதார அதிகாரிகளுக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே நிகழ்வில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மன்சூர் இலாஹி என்பவரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
"கொரோனா பரவலுக்கு காரணமான நிகழ்வு என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்வுக்கு நான் வரவில்லை. சீர்திருத்த உபதேசத்துக்காக மார்ச் மாத தொடக்கத்திலேயே நான் இங்கு வந்துவிட்டேன். இங்கு எத்தனை பேர் வந்தார்கள், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் அனைவரும் மசூதியில் இருக்கிறோம். சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக டெல்லி மாநில சுகாதார அதிகாரிகள் வெளியே வாகனங்களில் காத்திருக்கிறார்கள். அவர்கள் எங்களை அழைத்துச் சென்றபின்தான் என்ன நடக்கும் என்று முழுமையாகத் தெரியவரும்," என்றார் அவர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை செயலர் சன்முகம், ''டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து சென்று திரும்பிய சுமார் 700 நபர்கள் யார் என்றும் அவர்கள் எங்குள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பலரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர்களும் இரண்டு நாட்களில் கண்டறியப்படுவார்கள். நம்மிடம் பாதிப்புக்கு உள்ளவர்களைப் பார்க்கும்போது, வெளிநாடுகள், வெளிமாநிலத்திற்கு சென்றவர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி சென்று திரும்பியவர்களை, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.'' என தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லி அதிகாரிகளிடம் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லியில் உள்ள மூத்த தமிழக அரசு அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"நிசாமுதீனில் தங்களியுள்ளவர்கள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நாங்கள் டெல்லி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் அவர்கள் இந்த விஷயம் குறித்து ஏற்கனவே தெரிந்திருந்தது. எனவே அவர்கள் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை சோதனை செய்யும் நடைமுறைகளில் ஈடுபட்டிருந்தனர். நாங்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்." என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரோட்டில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் மூன்று பேர் தாய்லாந்தை சேர்ந்தவர்கள்.
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஸ்லிம்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
"சமீபத்தில் ஈரோட்டிலிருந்து டெல்லிக்கு சென்று வந்தவர்கள் மற்றும் கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டினரோடு தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை காவல்துறையினர் கண்டுபிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வருகின்றனர். அவர்களில் கொரோனா அறிகுறிகள் உடையவர்களை தனிவார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம். அந்த வகையில் சுமார் 100 பேர் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்ட 20 நபர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வசிப்பவர்கள் என மொத்தம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். இவர்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை அவர்கள் இடத்திற்கே சென்று வழங்கி வருகிறோம்." என ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செளண்டம்மாள் தெரிவித்தார்.

தப்லிக் ஜமாத் அமைப்பு

இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தப்லிக் அமைப்பினர் ஆண்டு தோறும் தப்லிக் செயல்பாடுகளில் நாடு முழுவதும் ஈடுபடுவர்.
பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் குறிப்பாக இந்தோனீஷியா, மலேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் கிர்கிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு தப்லிக் செயல்பாடுகளுக்காக வருகின்றனர்.
பொதுவாக இப்படியாக இந்தியாவுக்கு வருபவர்கள் டெல்லி நிஜாமுதினில் உள்ள தப்லிக் மார்கஸில்தான் தங்கள் வருகையைப் பதிவு செய்துவிட்டு நாடு முழுவதும் தப்லிக் செயல்பாடுகளில் ஈடுபடச் செல்வர்.
ஹஜ்ரத் நிஜாமுதீனில் உள்ள மார்கஸில் மார்ச் 21 ஆம் தேதி 1746 பேர் தங்கி இருந்தனர். அதில் 1530 பேர் இந்தியர்கள், 216 பேர் வெளிநாட்டினர்.
அதே சமயத்தில் நாடு முழுவதும் 824 வெளிநாட்டினர் தப்லிக் செயல்பாடுகளில் ஈடுபட்டு இருந்தனர்.
மார்ச் 21 ஆம் தேதியே 824 வெளிநாட்டினர் குறித்த தகவல்கள் மாநில காவல் துறையிடம் பகிரப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் மற்றும் தனிமைப்படுத்தவும் கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு ஊர்களில் தப்லிக் செயல்பாடுகளில் உள்ள இந்திய தப்லிக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கக் கோரப்பட்டது. இதுவரை 2137 பேர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். என தப்லிக் அமைப்பினர் குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.


Advertisement