மக்களே வருகை தந்தனர்

(க.கிஷாந்தன்)

பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (28.04.2020) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள் வருகை தந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். எனினும், அண்மைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று குறைந்தளவான மக்களே வருகை தந்திருந்தனர்.

அத்துடன், தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கம் 3 அல்லது 4 இருப்பவர்களையே, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அந்த நடைமுறையை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை.

அதேபோல் பொது போக்குவரத்தின் போது எவ்வாறு செயற்படவேண்டும் என விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களையும் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கவில்லை. ஒரு சில அரச மற்றும் தனியார் பஸ்களில் உரிய வகைளில் நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தன.

நுவரெலியா மாவட்டத்தில் அட்டன்,  நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை, நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி மற்றும் பொகவந்தலாவ ஆகிய நகரங்களில் இதே நிலைமைதான் காணப்பட்டது.

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சுகாதார மற்றும் அடையாள அட்டை நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனை வழங்கி, பொதுநலன் கருதி செயற்படுமாறு வலியுறுத்தினர்.

அதேவேளை, மேற்படி நகரங்களில் ச.தொ.ச விற்பனை நிலையங்கள், சுப்பர் மார்க்கெட்டுகள், சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தனர். மருந்தகங்களுக்கு முன்னாலும் நீண்ட வரிசை இருந்தது.

பெருமபலானவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தாலும், ஒரு சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதையும் காணமுடிந்தது.

அத்தியாவசிய மற்றும் மிக முக்கியமான பொது சேவைகளுக்காக அரச மற்றும் ஒரு சில தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டிருந்தாலும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை  அச்சுறுத்தலுக்குரிய காரணியாகும் என சமூக ஆர்வளர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக அட்டன் நகரில் ஒரு சில நடைபாதை வியாபாரிகளும், எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாமலேயே வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 


Advertisement