தேவையற்ற மன அழுத்தத்தில் பெண்கள்



ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தமும் அதனால் அவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் மகப்பேறு மருத்துவர் உமையாள் முருகேசனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரிடம் பேசினார். பேட்டியிலிருந்து

கே: ஊரடங்கு காலத்தில் பல்வேறு மன அழுத்தங்கள் ஏற்படக்கூடிய நிலையில், அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் மாறுதல்கள் ஏற்படுமா?

ப: இளம் வயதினர் ஒரே இடத்தில் அதிக நேரம் டிவி பார்ப்பது, மொபைல் கேம்ஸ் விளையாடுவது என்றாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் நினைத்த மாதிரி நண்பர்களுடன் வெளியே செல்லவில்லை என்பதால் ஒரு மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுவாக வீட்டில் இருப்பவர்களுக்கு 5 -10 சதவீதம் வரை எடை கூடியுள்ளது. நமது மூளையில் ஏண்டியிரியா பிடியூட்டரி, போஸ்டீரியா பிடியூட்ரி என உறுப்புகள் மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோன்கள் சுரக்க காரணமாக உள்ளன நமது உடலின் அனைத்து கட்டுப்பாடுகளும் மூளையை பொறுத்தே இயங்குகிறது. எனவே திடீரென உடலின் எடை கூடினால் அந்த கூடுதல் எடைக்கான ஹார்மோன்கள் சுரப்பதில் சிரமம் ஏற்படும், இதனூடே மன அழுத்தம், மன உளைச்சல் இதுவும் சேருகிறது எனவே இதனால் மாதவிடாய் சுழற்சி வரவில்லை அல்லது வந்த அதிகப்படியான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தற்போது நாங்கள் டெலிகன்சல்டன்சி செய்வதால் இம்மாதிரியான பிரச்சனையுடன் கூடிய பல அலைப்பேசி அழைப்புகள் எங்களுக்கு தொடர்ந்து வருகின்றன.

எல்லோர் வீட்டிலேயும் இளம்பருவ பெண்கள் உள்ளனர் அவர்களுக்கு பொதுவாக ஏற்படாத மாதவிடாய் பிரச்சனைகள் இந்த சமயத்தில் ஏற்படுகின்றன.

அதிகப்படியான ரத்தப்போக்கு என அவசரமாக வரும்போது நாங்கள் முதலில் ஹீமோக்ளோபின் சோதனை செய்வோம். அவ்வாறு சோதனை செய்யும்போது இளம்பெண்கள் நிறையப் பேருக்கு 5.5 - 7 என ஹூமோக்ளோபின் அளவு உள்ளது. அவர்கள் ஊரடங்கின் காரணமாக வரமுடியவில்லை என்கின்றனர். எனவே ஹீமோக்ளோபின் அளவு மிக குறைவான பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதில் நிறைய பேருக்கு பிசிஓடி போன்ற பிரச்சனைகள்கூட கிடையாது. இம்மாதிரியாக அனைத்தும் சரியாக இருந்தாலும், அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு கவுன்சிலிங் கொடுக்கிறோம். இரும்புச் சத்து குறைபாட்டை ஊசி மூலம் சரி செய்கிறோம். மேலும் பெற்றோர்களிடம் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு வழங்க வேண்டிய அவசியத்தைக் கூறுகிறோம்.

தற்போதுள்ள சூழலில் உணவு முறையே பெரும் பிரச்சனையாக உள்ளது. நிறைய நொறுக்கு தீனி உண்ணுகிற குழந்தைகளுக்கு நாம் சத்தான ஆகாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது.

கொரோனா வைரஸ்: தேவையற்ற கர்ப்பங்கள், மன அழுத்தத்தில் பெண்கள் - பிரச்சனையும், தீர்வும்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, வேர்க்கடலை போன்ற சத்தான உணவை உட் கொள்ளுங்கள் என இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். இரண்டாவது சில எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மாடிப்படி ஏறுவது, ஏதேனும் சிறு பயிற்சி செய்து கொண்டே டிவி பார்ப்பது, நடப்பது என செய்யலாம். இந்த சமயத்தை பாடுவது, சமையல், நடனம் என மறந்துபோன உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Banner

கே: இந்த ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர்?

இந்த ஊரடங்கு சமயத்தில் பலர் கருத்தரிக்கின்றனர் ஆனால் அதேசமயம் அதிக கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. தற்போது கர்ப்பகால பராமரிப்புகள் அதிகமாகவுள்ளதால் கருச்சிதைவுகள் என்பது அரிதாகவே ஏற்படும். ஆனால் இந்த ஊரடங்கு சமயத்தில் வாரம் ஒன்றிற்கு 2-6 பேர் இம்மாதிரியான பிரச்சனைகளுடன் வருகிறார்கள். இந்த ஊரடங்கு சமயத்தில் ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தவர்களுக்கும்கூட கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தால் மிக கவனத்துடன் அதை கொண்டு செல்வோம் ஆனால் தற்போது அந்த குழந்தைகளுக்கும் கடினமாகவுள்ளது. இதுவொருபுறம் இருக்க மறுபுறம் பலருக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் குழந்தை உண்டாகிறது. ஆனால் அது தேவையற்ற கர்ப்பமாக உள்ளது. தேவையான பாதுகாப்பு இல்லாமை, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் இந்த கர்ப்பங்கள் ஏற்படுகின்றன எனவே ஊரடங்கில் நாங்கள் நிறைய தேவையற்ற கர்ப்பங்களைப் பார்க்கிறோம் அதுவும் ஒரு பெரிய சமூக பிரச்சனையாக உருவாகி வருகிறது. எங்களது ஒரு மருத்துவமனையில் மட்டும் தினமும் இம்மாதிரியாகக் குறைந்தது இரண்டு பேர் வருகின்றனர்.

கே: இம்மாதிரியான பிரச்சனைகள் பெண்களின் உடல்நலத்தில் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால பாதிப்புகள் என்னென்ன?

இந்தியா அதிகமாகக் கூட்டுக் குடும்ப முறையை கொண்டது. எனவே இந்த சமயத்தில் பலருக்கு குடும்பங்களின் ஆதாரவு கிடைக்கிறது. ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு தாய் வீட்டிற்கு பயணம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த மாதிரி சமயத்தில் ஸ்கைப் போன்ற வசதிகளைப் பயன்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு பயணம் செய்ய முடியாததால் பொதுவாக கிடைக்ககூடிய தாய் வீட்டின் அரவணைப்புகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டால் அதற்கான விளைவுகளை நாங்கள் பார்க்கிறோம். கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த அழுத்தம், ஹைபர் டென்ஷன் போன்ற விஷயங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதிகப்படியான ஹைபர் டென்ஷன் என்பது பத்து வருடங்களுக்கு முன் பார்க்க கூடிய ஒன்றாக இருந்தது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் மிக மிக குறைந்துவிட்ட சூழலில் தற்போது அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. சக்கரை அளவு சரியாக இருந்தவர்களுக்கு அந்த அளவில் மாற்றம் ஏற்படுகிறது. சக்கரை, ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களை வீடுகளிலேயே பரிசோதனை செய்து கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுறுத்துகிறோம்.இருப்பினும் தற்போது இம்மாதிரியான பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதைக் காண முடிகிறது.

நீண்டகாலத்திற்கு என்று பேசும்போது, நான் இதற்கு பழகிக் கொள்ள வேண்டும். கொரோனாவால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்பட்டன என்பதை நாம் யோசிக்க வேண்டும். முதலில் சுத்தமாக இருப்பதற்குப் பழகிக் கொண்டோம் எனவே இதன்மூலம் தொற்று மூலம் ஏற்படக்கூடிய சலி, வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. இந்த சூழலில் குடும்பங்களின் அவசியத்தை நாம் புரிந்து கொண்டோம். இன்னமொரு முக்கிய விஷயம் நாம் உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்பது. புரதச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை உண்ண வேண்டும், காய்கறிகள், முட்டை, பயிர்கள், விட்டமின் சி நிறைந்த உணவுகள், பால் போன்று சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் மிளகு, பூண்டு போன்றவற்றை ஒதுக்காமல் உண்ண வேண்டும். இது ஒரு நெருக்கடியான காலம்தான் ஆனால் அதுகுறித்து நாம் யோசித்து கொண்டிருந்தால் மனதளவிலும் உடலளவிலும் நாம் வலிமை இழந்துவிடுவோம். நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது நமது நோய் எதிர்ப்பு சக்தி சரியாக வேலை செய்யாது. எனவே நாம் நேர்மறையான சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும். எனவே இவை அனைத்தையும் நாம் கடைப்பிடித்தால் கொரோனா முடிந்து நாம் வெளியே வரும் சூழலில் வலிமை மிக்கவர்களாக மாறியிருப்போம்.