"சிங்கப்பூர் துவண்டுவிடாது; மேம்பட்ட நாடாக மீண்டெழும்":


சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இன்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கொரோனா வைரஸ் கடுமையான சவால்களைத் தந்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வலுவான, மேம்பட்ட நாடாக சிங்கப்பூர் மீண்டும் எழும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த சில ஆண்டுகள் சிங்கப்பூரர்களுக்கு இடையூறுகளும் சிரமங்களும் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், பல தொழில்துறைகள் மீள முடியாமல் போகலாம் என்றும், வேலைகள் பறிபோகக் கூடும் என்றும் கூறினார்.

தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்குக் குறைந்தது ஓராண்டு ஆகக்கூடும் என்று குறிப்பிட்ட பிரதமர், சிங்கப்பூரில் உள்ள எவரும் அஞ்சவோ மனம்தளரவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

"1965இல் கிடைத்த சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாடு துவண்டுவிடும் என்று பலரும் பலமுறை நினைத்ததைப் பொய்யாக்கியது சிங்கப்பூர்," என்று பிரதமர் லீ கூறியதாக  ஊடகம் தெரிவித்துள்ளது.