கெலி ஓயவில் விபத்து,மூவர் உயிரிழப்பு

பேராதெனிய, கம்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (27) பிற்பகல் 6.50 மணியளவில், கெலிஓயா பிரதேசத்தில், கெலிஓயா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எவ்வித கவனமும் இன்றி வீதியை கடந்த பாதசாரி மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பாதசாரி பாதையில் வீசப்பட்டு வீழ்ந்ததோடு, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சற்று தூரம் இழுத்துச் செல்லப்பட்டு வீசப்பட்டு வீழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், அதே திசையிலிருந்து வந்த முச்சக்கர வண்டி, பாதையில் வீழ்ந்த பாதசாரியின் மீது ஏறி, எதிர்த்திசையில் வந்து நிறுத்தப்பட்ட கார் மீது சாய்ந்து வீதியில் கவிழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, அதில் பயணித்த இரண்டு பெண்கள் ஆகிய மூவரும் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பாதசாரி மற்றும் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற மற்றுமொரு ஆண் ஒருவரும் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளின் சாரதி பேராதெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் பயணித்த பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் பயணித்த ஆணும், பாதசாரியும்  மரணமடைந்துள்ளனர்.

வெலம்பொட, ரெகவல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த, முச்சக்கர வண்டியின் பின்னாலிருந்து சென்ற கணவன் (54) மற்றும் மனைவி (53) ஆகிய இருவரும், கெலிஓயாவைச் சேர்ந்த 54 வயதான பாதசாரியுமே இவ்விபத்தில் மரணமடைந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சடலங்கள் கண்டி மற்றும் கம்பளை மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பேராதனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.