நோயாளர்களை மறைத்து தேர்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து உருவாகிய புதிய கொத்தணியில் மேலும் நோயாளர்கள் உள்ளார்களா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது.

நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்றுக்குள்ளான 17 பேர் அடையாளம் காணப்பட்டதாக வட மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் பாலித பண்டார தெரிவித்தார்.

நேற்று 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 9 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்களாவர்.

சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மேலும் 4 கைதிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஏனையவர்கள் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

கட்டாரில் இருந்து வருகை தந்த மூவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை 2,668 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இராஜாங்கனை பகுதியில் உள்ள 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தொடர்ந்தும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 248 குடும்பங்கள் இங்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்கனை பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்கனை பகுதியில் 1,016 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா – வெரல்லவத்தை மற்றும் பண்டாரவத்தை ஆகிய பகுதிகளில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இன்று PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

கம்பஹா பிரதான சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் கம்பஹா நகர சபையின் பொதுநோக்கு மண்டபத்தில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 70 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கஹவத்தை – அந்தான, வத்தகந்த பகுதியிலுள்ள 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் நேற்று (14) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய பல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரின் மனைவியின் வீடும் இதில் அடங்குகின்றது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகிய கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றுபவரின் அயல் வீட்டைச் சேர்ந்தவர் சீகிரிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என்பதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் சிலருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வௌி நபர்கள் சீகிரிய பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தம்புளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொத்தணி தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த கொத்தணி மத்திய நிலையத்தில் இருந்து உருவாகியது. மத்திய நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு வௌியே உள்ளவர்கள் 20 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். ஏனைய அனைவரும் இந்த மத்திய நிலையத்தில் உள்ளவர்கள். இந்த 20 பேரில் 16 பேர் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர். அதனைத் தவிர ஏனைய நால்வரும் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளமையால், பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்துள்ளமையால், இது முற்றுமுழுதான அபாய நிலை என்பது மற்றுமொரு பிரச்சினை. எனினும், இது பாரிய சமூகத்தொற்று அல்லது இரண்டாவது அலை என வதந்திகள் பரப்பப்படுகின்றது. அவ்வாறான வதந்திகளில் உண்மை இல்லை

என அஜித் ரோஹன கூறினார்.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றாளர் இருப்பது தெரியாமையால், அங்கிருந்த அதிகாரிகள் விடுமுறையில் பல இடங்களுக்கு சென்றுள்ளதாகவும், இந்த பாரதூர நிலையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் வீடுகளிலிருந்து வௌியில் வரும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசங்களை அணிந்துகொள்ளுமாறும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அரசியல் தேவைக்காக செயற்பட்டதால், கொரோனா அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக சிவில் அமைப்புகள், மொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பக்குவமடையாத செயற்பாடுகள் காரணமாக COVID-19 இரண்டாம் அலை நாட்டில் வௌிப்பட்டுள்ளதாக சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.

தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்த்து சுகாதார சட்டதிட்டங்களையும் ஆலோசனைகளையும் மீறி அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கும் நிலை வந்துள்ளது. மூன்று அடி இடைவௌியைப் பேணுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறும்போது, பஸ்களில் ஆசனங்கள் எண்ணிக்கைக்கு அமைவாக பயணிக்க இடமளிப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகள் பெறப்படவில்லை. அலோசனைகள் பின்பற்றப்படவுமில்லை. இலங்கையில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகள் கூறும் அலோசனைகள் பின்பற்றப்படவில்லை. பரிசோதனைகள் குறைவடையும் போது, அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட மாட்டார்கள். நோயாளர்களை மறைத்து தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அரசாங்கம் முயல்கின்றது

என சமன் ரத்னப்பிரிய மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொடர்பில் தற்போது எழுந்துள்ள நிலைமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றில் தௌிவுபடுத்தியது.

தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதையும் நோய் பரவுவதையும் கவனத்திற்கொள்ளும்போது நிலைமை அன்று இருந்ததை விடவும் பாரதூரமானதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொது சுகாதாரம் தொடர்பில் ஆபத்தான நிலையில் நாம் உள்ளோம். சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் எடுக்கும் சரியான தீர்மானங்களிலேயே எதிர்கால நிலை தங்கியுள்ளது. அதற்கு தேவையான அரசியல் ஒத்துழைப்பு கிடைத்துள்ள தருணத்தில், சுகாதார அமைச்சு சரியான தீர்மானங்களை மேற்கொள்ளாவிட்டால் இந்த நிலைமை பாரதூரமாக அமையலாம். தொழில்நுட்பத் தீர்மானங்களை எடுக்கும் குழுவினர் அடிக்கடி கூடி இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும்

என ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

வட மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களை சந்தித்தவர்கள் பதிவாகியுள்ளனர். ஒவ்வொரு மாகாணங்களிலும் நிலவும் அபாயம் மாறுபட்டதாகும். சிறு பிரிவுகளைத் தடுக்க நாம் பிராந்திய முடக்கத்தை மேற்கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் அதன் தாக்கம் குறைவடையும். தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாட்டிற்கே இதன்மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை தவிர்க்க முடியும்

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சில்வா கோரிக்கை விடுத்தார்.

தவறான கருத்துக்கள் பரவுவது இரண்டாம் அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு தடையாக உள்ளதாக அவர் கூறினார்.

தகவல்களை வழங்கும் தரப்பினர் முறையாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காததால், பிழையான தகவல்கள் சமூகமயப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது

என நவீன் டி சில்வா குறிப்பிட்டார்.Advertisement