ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்: பயணத்தை முடித்தது


ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மெக்சிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.

'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்' என்ற விண்வெளி ஓடம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் விண்ணிற்கு இரண்டு மாத பயணம் மேற்கொண்டனர். இருவரையும் விண்வெளி வாகனத்தில் இருந்து பத்திரமாக பூமியில் தரை இறக்க மீட்பு கப்பல் அனுப்பப்பட்டது. இருவரும் ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர்.

நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென்
படக்குறிப்பு,

டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென்

முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது.

உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், சேவையை பயன்படுத்துவது, நாசாவிற்கு செலவை குறைப்பதாக கூறப்பட்டது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம் அமெரிக்காவின் புதிய வர்த்தகம் துவங்கியுள்ளது.

எதிர்காலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து போக்குவரத்து தேவைகளுக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனத்தை அமெரிக்க பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த பயணம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் குவையின் ஷாட்வெல் கூறுகையில் ''இது மிகவும் முக்கியமான நாள், இந்த வெற்றியை நாம் கொண்டாடவேண்டும். வரும் காலங்களில் இன்னும் கடுமையான பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். செவ்வாய்க்கு பயணம் மேற்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.