13 இலும் 19 இலும் சில நல்ல விடயங்கள் உள


 (க.கிஷாந்தன்)

 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. புதிய அரசியலமைப்பிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

 

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 20ஆவது திருத்தச்சட்ட மூலம் கொண்டு வரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேறப்போகின்றது. 19 இல் சில நல்ல விடயங்கள் உள்ளன. அவை பாதுகாக்கப்படவேண்டும். அதேபோல் 13ஆவது திருத்தச்சட்டத்திலும் நல்ல விடயங்கள் உள்ளன.

 

எனவே, புதிய அரசியலமைப்பை இயற்றும்போது மேற்படி சரத்துகளில் உள்ள நல்ல விடயங்களை உள்வாங்கவேண்டும். அவ்வாறு உள்வாங்கி புதிய அரசியலமைப்பை உருவாக்கினால்தான் அது சிறப்பாக இருக்கும்.

 

விருப்பு வாக்கு இல்லாமல் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதாலேயே 19 இற்கு ஆதரவாக அன்று வாக்களித்தோம். இறுதியில் மைத்திரியும், ரணிலும் எம்மை ஏமாற்றினார்கள்.  உறுதிமொழியை மீறினார்கள்.

 

ஜனாதிபதியின் பதவிகாலம் 5 ஆண்டுகள், இரு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம்,சுயாதீன ஆணைக்குழுக்கள், தகவல் அறியும் உரிமை என்பன சிறப்பான விடயங்கள். அவை தொடர்ந்தும் அப்படியே இருக்கவேண்டும்." - என்றார்.
Advertisement