எஸ்.பி. பாலசுப்ரமணியம்: மாரடைப்பு, மூச்சுத்திணறலால் போராடி உயிரிழந்த கடைசி நிமிடங்கள்




 


சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமான பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவமனை நிலுவை கட்டணத்தை வழங்கத்தேவையில்லை என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செப்டம்பர் 25ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மருத்துவ கட்டணத்தை வசூலிக்க அந்த மருத்துவமனை நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வந்தது.

    இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னையில் அந்த மருத்துவமனை தலைமை அதிகாரி, சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை திங்கட்கிழமை சந்தித்தார்.

    "ஏதோ ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இருந்தாலும். எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை முழுமையாக நம்பி நாங்கள் வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால், இந்த மருத்துவமனை துணைநிற்கும். அதற்கு ஒன்று என்றால் எங்களுடைய குடும்பம் துணை நிற்கும," என்று அவர் தெரிவித்தார்.

    "மருத்துவமனை கட்டணம் தொடர்பாக எங்களால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலுத்த முடியவில்லை என்றும் பிறகு நான் குடியரசு துணைத் தலைவரின் மகளிடம் விஷயத்தை சொன்னதும் அவர்தான் தலையிட்டு மீதி கட்டணத்தை செலுத்தியதாகவும் வதந்தி பரவி வருகிறது" என்று அவர் கூறினார்.

    "எனது தந்தை காலமான பிறகு, மருத்துவமனை நிர்வாகத்திடம் மீதமுள்ள கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என நான் கேட்டபோது, அதன் கணக்குப்பிரிவு அதிகாரிகள், எங்களிடம் மீதமுள்ள கட்டணத்தை வாங்கத்தேவையில்லை என்று தங்களின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக உடலை ஒப்படைத்து மற்ற விஷயங்களை அவர்கள் கவனிக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்று மட்டும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது" என்று எஸ்.பி. சரண் கூறினார்.

    Facebook பதிவை கடந்து செல்ல, 1

    தகவல் இல்லை

    மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

    Facebook பதிவின் முடிவு, 1

    எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், "அவர் காலமாகும் 48 மணி நேரத்தில் அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது" என்றனர்.

    அவரது மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியதாவும் அவருக்கு 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்காத நிலையில், மாரடைப்பும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டு எஸ்.பி.பியின் உயிர் பிரிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5ஆம் தேதி சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்குகொரோனா பாதிப்பு தாக்கம் அதிகமாக இருந்தது. அவருக்கு கொரோனா தொற்று குணம் அடைந்தாலும், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று மருத்துவர்கள் கூறினர்.

    எக்மோ, சுவாசக்கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தொண்டையில் டிரக்கியோஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டது. இத்தகைய சிகிச்சை முறைகள் அனைத்தும் செயற்கையாக தரப்பட்டன. இவை அனைத்தும் அசாதாரணமான சிகிச்சை முறைகள். இவற்றுக்கு சிகிச்சை தரும்போது அவரது ஒவ்வெரு உறுப்பும் செயலிழக்கத் தொடங்கின.

    நீண்டகாலமாக இந்த சிகிச்சை நடைமுறைகள் தொடரும்போது, இயல்பாகவே உடல் உறுப்புகளில் தொற்று அதிகமானது. இதுபோன்ற நிலையில், பத்தில் ஒருவருக்கு தொற்று அதிகமாக வாய்ப்புண்டு என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்த பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் கூறுகிறார்.

    தமிழக அரசு உதவ முன்வரவில்லையா?

    எஸ்.பி.பிக்கு சிகிச்சையின்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தங்களை தொடர்பு கொண்டு பேசியபோது, அரசு தரப்பில் ஏதேனும் உதவி செய்ய முடியுமா என கேட்டதாகவும் அதன் பிறகு அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் நானும் ஒரு சாதாரண நபர்தானே என்று எஸ்.பி. சரண் கூறினார்.

    இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் மருத்துவமனையை தொடர்புகொண்டு அவரது சிகிச்சை கட்டணம் தொடர்பாக ஏதேனும் தகவல் பகிரப்பட்டதா என செய்தியாளர் சந்திப்பில் இருந்த மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது.

    எஸ்.பி.பி சிகிச்சை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக வந்தார். ஆனால், அரசு தரப்பில் இருந்து சிகிச்சை கட்டணத்தை ஏற்பது தொடர்பாக யாரும் எதுவும் கூறவில்லை என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து எஸ்.பி. சரண், ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் எஸ்.பி.பி சேர்க்கப்பட்டது முதல், அவருக்கான மருத்துவமனை கட்டணத்தை வாரந்தோறும் எங்கள் தரப்பில் செலுத்தி வந்தோம். மேலும் மருத்துவ கட்டணத்தில் ஒரு பகுதியை நாங்கள் செலுத்தினோம். மற்றவை காப்பீடு தொகை மூலம் ஈடு செய்யப்பட்டது. எனவே, கட்டணம் தொடர்பாக எந்த பிரச்னையும் எழாத நிலையில், எஞ்சிய சிகிச்சை கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்ற தகவலும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சிகிச்சை கட்டணம் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று தெரிவித்தார்.

    சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக ஒரு நினைவிடம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப்படும். அங்கு தினமும் மக்களும் எஸ்.பி.பியின் ரசிகர்களும் மரியாதை செலுத்த வருவதை பார்க்கும்போது நெழ்ந்து போவதாக எஸ்.பி. சரண் தெரிவித்தார்.