விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி. விசாரணை


 


தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட ‘தமிழ் மக்களே இலங்கையின் மூத்த குடிகள்’ என்ற கூற்று தொடர்பில், அவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று சனிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். 

பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கொடுத்த முறைப்பாட்மை அடுத்தே, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பொதுத் தேர்தலுக்குச் சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களே இலங்கையின் மூத்த குடிகள்’ என்ற கருத்தில், 2019 நவம்பர் 14ஆம் திகதி கேள்வி – பதில் அறிக்கை ஒன்றை விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.


“அந்த அறிக்கை இன நல்லுறவைக் கெடுப்பதாக இருக்கின்றது எனவும், சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றது எனவும் பௌத்த பிக்கு ஒருவர், செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றது” எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், தன்னுடைய கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும், “உண்மையான தகவல் ஒன்றைச் சொல்வதன் மூலம் இன நல்லறவு பாதிக்கப்படும் என்றோ, சமாதானத்தை அது பங்கப்படுத்தும் என்றோ நான் நினைக்கவில்லை” எனவும் தெரிவித்துள்ளார். “இது உண்மையில்லை என்றால் நீங்கள் உங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். அதற்குப் பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன்” எனவும் விக்னேஸ்வரன் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

“இவ்வாறான அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்டமைக்கான காரணம் என்ன?” என விசாராணையாளர்கள் அடுத்ததாகக் கேள்வி எழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டால், அதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு தனக்கிருப்பதாகக் குறிப்பிட்டார். முதலமைச்சராக தான் இருந்த காலப் பகுதியிலும் இவ்வாறு பதிலளித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, “இந்த அறிக்கையை எவ்வாறு நீங்கள் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்தீர்கள்?” என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. தான் தன்னுடைய அலுவலகத்திலிருந்து அலுவலகக் கணினியைப் பயன்படுத்தி அதனை அனுப்பியதாக விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

“யார் யாருக்கு அனுப்பினீர்கள்?” என்று அடுத்த கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. தனது கணினியில் பல ஊடகங்களுடைய மின்னஞ்சல் முகவரிகள் இருப்பதாகவும், அவற்றுக்குத்தான் அவற்றை அனுப்பியதாகவும் விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

“அரசியல் ரீதியாக அல்லது வேறு காரணங்களுக்காக இந்த அறிக்கையை வெளியிட்டீர்களா?” என அடுத்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. “அப்படி அல்ல. என்னிடம் கேள்வி கேட்கப்பட்டால் அதற்குப் பதிலளிப்பது அவசியம். அது எனது பொறுப்பு. அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எனக்கு ஓரளவு அறிவுள்ளது. அந்த அறிவை மக்களுடன் நான் பகிர்ந்துகொண்டுள்ளேன்” என விக்கினேஸ்வரன் அதற்குப் பதிலளித்தார்.


சுமார் ஒன்றரை மணி நேரம் விக்னேஸ்வரனிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவரது சாட்சியம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு இறுதியில் அதில் அவரது கையொப்பமும் பெறப்பட்டது.