”அலி சப்ரி நீங்கள் இறந்தால் உங்களையும் எரிப்பார்கள்”

 


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.
உலக சுகாதார தாபனம் இதற்கான அனுமதி வழங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் கொரோனா பரவல் ஏற்பட்டதை முஸ்லிம்கள் மீது சுமத்தி, அவர்களுடைய மதப் பிரகாரம் இறந்த உடல்களை எரிப்பதற்கு அடிப்படைவாத தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றும் போது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பின்னர் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார்.
இது சம்பந்தமாக முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பில் விஷேட வைத்தியர்கள் குழுவொன்றை சந்தித்து பேசியதாகவும், அவர்கள் இதனால் ஏற்படும் விளைவு குறித்து அச்சமடைந்ததால் தான் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றும் கூறினார்.
எனினும் ஆறு மாதங்களின் பின்னர் இது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அவர்கள் கூறியதாகவும், தாம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதியமைச்சர் அலி சப்ரி கூறினார்.
இதனிடையே எழுந்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையை அவசரமாக பெற்றுக் கொடுக்குமாறு கூறினார்.
அந்த நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என்று அவர் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்று வரை 09 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய விஷேட வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
எனினும் ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை இந்தக் குழு நியமிக்கப்படவில்லை. இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது அரசியல் பிரச்சினையில்லை.
நான் மரணித்தால் என்னையும் தகனம் செய்வார்கள், நீங்கள் இறந்தால் உங்களையும் தகனம் செய்வார்கள். இதுதான் இறுதியிலல் நடக்கும் என்று நீதியமைச்சரைப் பார்த்து முஜிபுர் ரஹ்மான் கூறினார்.