உயிரிழந்த 9 கைதிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை


 மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 9 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


இன்று (05) பகல் வரை இருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


31 மற்றும் 39 வயதான ஜா – எல களுபாலம மற்றும் வத்தளை – உனுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களின் சடலங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதேவேளை, கைதிகளின் குடும்பத்தினர் இன்றும் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்டனர்.


இதேவேளை, சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


இந்த விசாரணைகளுக்கு 08 உத்தியோகத்தர்கள் மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினரால் நேற்றைய தினம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, நிராயுதபாணிகளான சிறைக்கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றொழித்தமையை வன்மையாக கண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.


இந்த சம்பவமானது, கடந்த பல வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை கொன்ற சம்பவத்தை நினைவூட்டுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் அவசியம் எனவும் தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.


இது மிகவும் தீவிரமான விடயம் என்பதால், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.Advertisement