ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது காலத்தின் கட்டாயம்

 


வி.சுகிர்தகுமார் 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது காலத்தின் கட்டாயமும் தேவையும் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பி.எச்.பியசேன கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் பல அறிக்கைகளிலும் ஊடகங்களிலும் அக்கரைப்பற்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக அடையாளப்படுத்தப்பட்டன. இது முற்றிலும் தவறான அறிக்கை. இது தொடர்பிலும் பிரதேசத்தின் பெயர் மாற்றம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆகவே இவ்வாறான தவறான அறிக்கைகள்; எதிர்காலத்தில் வராமல் இருப்பதற்கும் நமது அக்கரைப்பற்றின் பெயரை முன்னிறுத்துவதற்கும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின்; பெயரை மாற்றுவதே தீர்வாக அமையும்; எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்   அக்கரைப்பற்றின் ஒன்றினைந்த பிரதேசமே ஆலையடிவேம்பு.  தற்போதைய ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் அக்கரைப்பற்று என குறிப்பிடும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் ஏனைய பெயர்களில் ஆலையடிவேம்பு உள்ளிட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த காலத்தில் பிரதேச சபை பிரிப்பின் போது நமது அரசியல்வாதிகள் ஆலையடிவேம்பு என பெயர் வைத்தனர். சுயநலனுக்காக அன்று அவர்கள் விட்ட தவறே இது. இதனையே நாம் சுமந்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவே இதனை நாம் தற்போதாவது மாற்ற வேண்டும். இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுமாறு நான் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் குரல் கொடுக்க வேண்டும். கல்முனை பிரதேச செயலக தரமுயர்வில் விட்ட தவறை இதில் விடாதீர்கள். ஆனாலும் அவர்கள் மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள். பெரும்பான்மை இனத்தையும் பிரித்து சிறுபான்மை இனத்திற்குள்ளும் மோதலை உருவாக்கி அரசியல் செய்து கொண்டுவருகின்றனர். ஆகவே நாம் யாருடனும் மோதியோ அல்லது கசப்புணர்வை ஏற்படுத்தியோ வாழ விரும்பவில்லை. வாழ விட்டு வாழ வேண்டும் என நினைக்கின்றோம்.
ஆகவே அனைவரும் இணைந்து நமது பிரதேசத்தின பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் பெயரை அக்கரைப்பற்று தெற்கு என மாற்றுவது கடமை. அதுவே நாம் மக்களுக்கு செய்யும் நன்மை எனவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.