அவுஸ்திரேலியா திணறுகின்றது


 


ரஹானே ரன்-அவுட்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. 12-வது சதத்தை அடித்த கேப்டன் அஜிங்யா ரஹானே 104 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.

கேப்டன் ரஹானே (112 ரன், 223 பந்து, 12 பவுண்டரி) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை ரன்-அவுட்டில் தாரைவார்த்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானே ரன்-அவுட் ஆகியிருப்பது இதுவே முதல் நிகழ்வாகும். அதன் பிறகு மேற்கொண்டு 32 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 15-வது அரைசதத்தை எட்டிய ஜடேஜா 57 ரன்களில் (159 பந்து, 3 பவுண்டரி) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

சுமித்தின் வித்தியாசமான அவுட்
பின்னர் 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய பவுலர்கள் கொடுத்த குடைச்சலில் ஆஸ்திரேலியா மறுபடியும் திண்டாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் (4 ரன்) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் பிடிபட்டார்.

அடுத்து மேத்யூ வேட்டும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஸ்கோர் 42 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் (28 ரன்) அஸ்வின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு வந்த அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் ஸ்டீவன் சுமித் இந்த முறையும் தாக்குப்பிடிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சற்று லெக்சைடு வாக்கில் வீசிய பந்து ஸ்டம்பில் இருந்த பெய்ல்சை லேசாக தட்டிவிட்டு பின்னோக்கி ஓடியது. இதை கவனிக்காத சுமித் (8 ரன், 30 பந்து) ரன் எடுக்க ஓடினார். அதற்குள் இந்திய வீரர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்ததும், திகைத்து போனார். ரீப்ளேவுக்கு பிறகு அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது. நடப்பு தொடரில் 3-வது முறையாக அவர் ஒற்றை இலக்கத்துடன் துரத்தப்பட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் நிதானமாக செயல்பட்ட மேத்யூ வேட் (40 ரன், 137 பந்து, 3 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்து பலன் இன்றி நடையை கட்டினார். டிராவிஸ் ஹெட் (17 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (1 ரன்) ஆகியோரும் சீக்கிரம் வீழ்ந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 99 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு

6 விக்கெட்...
இதனால் 3-வது நாளுக்குள் போட்டி முடிவுக்கு வந்துவிடும் போல் தோன்றியது. இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனும், பேட் கம்மின்சும் இணைந்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 18 ஓவர்களை சமாளித்த இந்த ஜோடி ஆட்டத்தை 4-வது நாளுக்கும் நகர்த்தியது. வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 3.3 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இது இந்தியாவுக்கு கொஞ்சம் பின்னடைவாக அமைந்தது.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 66 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 2 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருக்கிறது. கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும் (65 பந்து), கம்மின்ஸ் 15 ரன்னுடனும் (53 பந்து) களத்தில் உள்ளனர்.இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இன்றைய நாளில் ஆஸ்திரேலிய அணியை மதிய உணவு இடைவேளைக்குள் சுருட்டிவிட்டால் அதன் பிறகு எளிய இலக்கைத் தான் இந்தியா எட்டும் நிலை ஏற்படும். இந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாகியுள்ளது.


டிம் பெய்ன் அவுட்டில் மீண்டும் சர்ச்சை
முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்னின் ரன்-அவுட் விஷயம் சர்ச்சைக்குள்ளானது. இந்திய வீரர் ரிஷாப் பண்ட் பந்தால் ஸ்டம்பை தாக்குவதற்குள் டிம் பெய்ன் பேட்டை லைனுக்குள் வைத்தாரா? இல்லையா? என்பதில் தெளிவு கிடைக்காததால் சந்தேகத்தின் பலன் டிம் பெய்னுக்கு சாதகமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது இன்னிங்சிலும் அவரது அவுட் சர்ச்சையை கிளப்பியது. டிம் பெய்ன் (1 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். முதலில் நடுவர் பால் ரீபெல் விரலை உயர்த்தவில்லை. இதையடுத்து இந்தியா டி.ஆர்.எஸ். உதவியை நாடியது. இதில் ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தின்படி ஆராய்ந்த போது பந்து பேட்டில் உரசியதற்கான அறிகுறி தென்படவில்லை. ஆனால் ‘ஸ்னிக்கோ’ ஆய்வில் பந்து பேட்டை கடந்த போது சத்தம் கேட்டது. அதாவது பந்து பேட்டில் பட்டதற்கான அதிர்வலையை காட்டியது. அதன் அடிப்படையில் டிம் பெய்னுக்கு 3-வது நடுவர் அவுட் வழங்கினார். இந்த முடிவால் டிம் பெய்ன் அதிருப்தியுடன் வெளியேறினார். ‘முந்தைய நாள் இதே போல் புஜாராவுக்கு நாங்கள் அவுட் கேட்டோம். ஸ்னிக்கோ நுட்பத்தில் கூட பந்து பேட்டில் பட்டதற்கான லேசான அடையாளம் தெரிந்தது. ஆனால் அவருக்கு நாட்-அவுட் வழங்கப்பட்டது. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முரண்பாடற்று ஒரே மாதிரி இருக்க வேண்டும்’ என்று ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் வலியுறுத்தியுள்ளார்.