சகல கடைகளையும் திறக்க அனுமதி
 வி.சுகிர்தகுமார் 0777113659   

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் (அக்கரைப்பற்று தெற்கு) சமூகத்தொற்று குறைவடைந்துள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் உள்ளிட்ட சகல வியாபார நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் அனைத்து வியாபார நிலையங்களும் சிகை அலங்கார நிலையங்களும் இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செயற்படாத வியாபார நிலையங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதுடன் உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த வியாபார நிலையங்கள் காலவரையின்றி மூடிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சிகை அலங்கார நிலையங்களில் சவரம் செய்தல் மற்றும் முகஅலங்காரம் செய்தல்(பேசியல்) தடை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசம் சுமூகமான நிலையை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளை விடுவிப்பதற்கான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகவும் விரைவில் அனைத்து பகுதிகளும் விடுவிக்கப்படும் எனவும் கூறினார்.
எது எவ்வாறாயினும் தொடர்ந்தும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் எனவும் இதன் மூலமே கொரோனா தொற்றுநோயை எமது பகுதியில் இருந்து முற்றாக இல்லாமல் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.