ரஞ்சனுக்கு ”4 வருட கடூழிய தண்டனை அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு”



 ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் திரு சுமந்திரன் அவர்கள் தெரிவித்தபோது பின்வருமாறு கூறினார்.

திரு.ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார். துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நீண்ட காலமாக இவ்வாறான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையிருந்தும், பொதுநல நோக்கோடு அநேக வரைபுகள் வரையப்பட்டும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே காட்டுக்கழுதைக்கு கிடைத்த சுதந்திரம் போல எவரும் எதனையும் தீர்ப்பளிக்க கூடியதொரு சூழ்நிலை காணப்படுவதின் பாரதூர தன்மையினையும் விளக்கினார். மேலும் உள்ளூர் சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஆங்கிலேய சட்டங்களே கணிசமான அளவில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதாலும், அதிலும் நீதிமன்ற அவதூறு ஒரு குற்றமாக தற்போது கணிக்கப்படுவதில்லை என்பதனை கருத்தில் கொள்ளாது, குறித்த தீர்ப்பினை அளித்தது தவறானதொரு போக்கு என்பதே தமது நிலைப்பாடு என்பதனையும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடமானது நேர்மையானதொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அசாதாரணமுறையில் அநீதி இழைக்கப்பட வழி வகுத்துள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.