இலங்கையின் இரண்டாவது நீர்வீழ்ச்சியின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்





 (க.கிஷாந்தன்)

இலங்கையில் சுற்றாடலை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இலங்கை அரசினால் கடந்த காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும் நமது நாட்டுக்கு வருகின்ற உல்லாச பயணிகள் விரும்ப கூடிய சுற்றுலா மையங்கள் பல நமது நாட்டில் காணப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகளுக்கு தனி ஒரு பெருமை உள்ளது. அணைவரும் விரும்பக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் இலங்கையில் ஈரவலப் பிரதேசங்களான மலையக பிரதேசத்தை உள்ளடக்கியே இவைகள் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் காணப்படுகின்ற நீர்வீழ்ச்சிகள் உலக வரைபடத்திலும் கூட சிறந்து விளங்குகின்றது. அதி உயரமான நீர்வீழச்சிகளை இலங்கையில் பார்ப்போமேயென்றால் அதிக முக்கிய பங்கை ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டமும் கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை கொஸ்லந்தை பிரதேச சபைக்குட்பட்ட கொஸ்லந்தை வெல்லவாய பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள தியலும நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது அதி உயரம் கொண்ட நீர்வீழ்ச்சி என யாவரும் அறிந்த விடயம்.

இந்த நீர்வீழ்ச்சியானது 722 அடி உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச பயணிகள் அதிகமாக வந்து செல்வது ஒரு சிறப்பம்சமான விடயமாகும்.

பண்டாரவளை பூனாகலை பிரதேசத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆற்றின் நீர் தியலும நீர்வீழ்ச்சியின் ஊடாக வழிந்தோடுகின்றது. வற்றாத நீர்வீழ்ச்சியாக பெருமைக்கொண்டுள்ளது இந்த தியலும நீர்வீழ்ச்சி.

ஈரவலப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை பலரும் பிரதான வீதியிலிருந்தே கண்டு இரசிக்கின்றனர். ஆனால் இந்த நீர்வீழ்ச்சியின் உயர பகுதியில் சிறப்பு மிக்க அம்சங்களை காணமுடியும் என்பது பலரால் உணரப்பட்டுள்ளது.