நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் முன்னெடுத்துள்ளார்


 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு
வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைய  தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.

இன்று (6) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில்   குறித்த போராட்டமானது 2 ஆவது நாள் இவ்விளைஞனின் பங்குபற்றலுடன்   ஆரம்பமாகி உள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை(5)  பொலிசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து நீதிமன்ற  கட்டளையை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பெற்று கொள்ளுமாறு வற்புறுத்தினர்.

 இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு பதாதைகளை அகற்றியதுடன் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டனர்.

அத்துடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணி போது கலந்துகொண்ட மக்கள் குறித்த சுழற்சி உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.விசேடமாக இப்போராட்டத்தில் ஒரு பங்காளராக கலந்து கொண்ட முஸ்லிம் மக்களும் இப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது தவிர குறித்த போராட்டத்தில் நேற்று(5)  அம்பாரை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்  , கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவர் தாமோதரம் பிரதீபன் அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன்  உட்பட சில அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலைந்து சென்றிருந்தனர்.

இவ்வாறு உள்ள நிலையில் இன்று(6) காலை குறித்த இளைஞன் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்.

இவர் தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் மறுவடிவமாக இப்போராட்டமானது சுவிஸ் நாட்டில் உண்ணாவிரதம் உள்ள பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுத்துள்ளேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளரான நான் சாதாரண குடும்பத்தில்  உள்ள நான் மக்களுக்காகவே போராடி வருகின்றேன்.எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் பயப்படப்போவதில்லை.எனது இனத்திற்காக உயிரையும் கொடுக்க தயங்க மாட்டேன்.

சுழற்சி முறையான இப்போராட்டத்தில் பல்வேறு  தடைகளை உடைத்து முன்னெடுத்துள்ளோம்.அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.எதிர்வரும் 10 திகதி வரை இச்சுழற்சி முறையிலான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.இப்போராட்டத்திற்கு பி2பி பேரணியில் பங்கு பற்றியவர்கள் ஆதரவு வழங்க வேண்டும்.முஸ்லீம் மக்களும் எம்மை தொப்புள் கொடி உறவுகளாக எம்மை மதித்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.என அவர் கேட்டுள்ளார்.